தாப்பா தமிழ்ப்பள்ளியின் 62ஆவது விளையாட்டுப் போட்டி

தாப்பா, டிச. 11-

தாப்பா தமிழ்ப்பள்ளி, தரமான மாணவர்களை உருவாக்கிக்  கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். எங்களை நம்பி பிள்ளைகளை அனுப்புங்கள் என தாப்பா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் கே. குமுதா பெற்றோரிடத்தில் உறுதியளித்தார்.

தாப்பா தமிழ்ப்பள்ளி சுற்றுச்சூழல் மேம்பாட்டையும் கண்டுள்ளது.மாணவர்கள் பல்வேறு வெற்றிச் சாதனைகளை பள்ளிக்கு ஈட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தலைமையாசிரியராக எனக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி பொறுப்பாளர்களுக்கும் பெற்றோருக்கும் பெருமையை ஏற்படுத்துகிறது என பள்ளியின் 62ஆவது விளையாட்டுப் போட்டியில் தலைமையுரை வழங்கியபோது அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன் வரவேற்புரையாற்றிய பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் மு. நேசராஜன், விளையாட்டுப் போட்டிக்காக மட்டுமல்லாமல் கால்பந்து, தடகள விளையாட்டு என எப்போதுமே தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திறம்பட ஈடுபட்டு வருகின்றனர். இது விளையாட்டுத் துறைக்கு மாணவரை ஊக்கப்படுத்தும் வண்ணம் உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

பெற்றோர் -ஆசிரியர் சங்கம், எப்போதும் சிறந்த ஒத்துழைப்பை பள்ளிக்கு வழங்க தயாராக இருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் பள்ளி தரப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
விளையாட்டுப் போட்டியை பத்தாங் பாடாங் மாவட்ட கல்வி அதிகாரிகளுள் ஒருவரான ஷாருல் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து வாழ்த்துரையும் வழங்கினார்.

விழாவில் பெற்றோர்- ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர் என திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

(ராமேஸ்வரி ராஜா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here