கிள்ளான் சாலையில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர்:

டந்த வெள்ளிக்கிழமை மாலை கிள்ளானில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் காத்திருந்த கார் ஓட்டுநரிடம், பேஸ்பால் மட்டை மற்றும் பாராங் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிற்பகல் 2.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர் கிள்ளான், ஜாலான் மேருவில் உள்ள வங்கியில் ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்துள்ளார் என்று தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை துணை போலீஸ் தலைவர் கமலாரிஃபின் அமன் ஷா கூறினார்.

கறுப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவர், பின்னர் கிள்ளானின் புக்கிட் திங்கி நகருக்குச் சென்றதாகவும், பின் அவர் பெர்சியாரன் பெகாகாவில் காரை நிறுத்தியபோது முகமூடி அணிந்த இரண்டு சந்தேக நபர்களால் அணுகப்பட்டார் என்று அவர் கூறினார்.

“பேஸ்பால் மட்டையுடன் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்களில் ஒருவர் முன்பக்க பயணிகளின் கண்ணாடியை உடைத்துள்ளார், அதே நேரத்தில் பாராங் ஏந்திய மற்றொருவர் ஓட்டுநரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தார்.

“பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினி பையை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தினர், பின்னர் சந்தேக நபர்கள் சாம்பல் நிற தோயோத்தா யாரிஸ் வகைக் காரில் தப்பிச் சென்றனர்,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினி தொலைந்ததாலும், காரின் கண்ணாடிகள் இரண்டிலும் சேதம் ஏற்பட்டதாலும் RM6,000 இழந்ததுடன், அவரது வலது கையில் விரல் முறிவு மற்றும் கீறல்கள் ஏற்பட்டதாகவும் கமலாரிஃபின் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-33772222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here