ஜப்பானில் 155 முறை நிலநடுக்கம்; 24 பேர் பலி!

புத்தாண்டு நாளான நேற்று ஜப்பானில் 155 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் திங்கள்கிழமை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மீட்டர் உயரத்துக்கும் மேல் சுனாமி அலைகள் தாக்கின. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்குள்ள சாலைகள் பெயர்ந்து பெரிதும் சேதமடைந்தன.

இஷிகாவா மாகாணத்தின் வஜிமா நகரில் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அருகே கடைகளால் சூழப்பட்ட அசைச்சி-டோரி பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும், வஜிமா துறைமுகமும் பெரும் பாதிப்புக்குள்ளானது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், “ஏராளமான உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

மேலும் தீ விபத்து உள்ளிட்ட பலத்த சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி, மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடுமையான பாதிப்புக்குள்ளான வாஜிமா துறைமுகத்தில் 7 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் 7.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி, இதுவரை ஜப்பானை உலுக்கிய 150க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் இந்த அளவுகோலும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஜிமாவில் 1.2 மீட்டர் (நான்கு அடி) உயர சுனாமி அலைகள் தாக்கின. மேலும் தொடர்ச்சியான சிறிய சுனாமிகள் வெவ்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் மிகப் பெரிய சுனாமி அலைகள் ஏற்படவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் ஜப்பான் அரசு நீக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here