சீனாவில் தன் கையைக் கடித்து காயப்படுத்திய எலியை துரத்திப் பிடித்த மாணவி ஒருவர் பழிக்கு பழியாக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜியாங்ஷூ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் 18 வயது மாணவி. அவர், கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், அந்த ஹாஸ்டலில் எலித்தொல்லை அதிகம் என கூறப்படுகிறது. இந்த சுழலில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி, இரவு அந்த மாணவி தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, எலி ஒன்று அவரது கையில் கடித்ததாக தெரிகிறது. இதில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், எலியை அந்த அறை முழுவதும் துரத்திப் பிடித்துள்ளார். மேலும், அந்த எலிக்குப் பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த அந்த பெண் எலியின் கழுத்தில் தனது ஆத்திரம் தீரக் கடித்துள்ளார்.
இதனால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தின் போது, பெண்ணின் உதட்டில் லேசான காயம் ஏற்பட்டதோடு, எலியின் தலையும் அவரது வாய்க்குள் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, சக மாணவிகளால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, அந்த மாணவி நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது, அந்த பெண்ணின் அறைத்தோழியின் ஃபேஸ்புக் பதிவு மூலமாக வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தப் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.