நடுவானில் திக்திக்.. அப்படியே பெயர்ந்த விமான கதவு.. பக்கத்தில் இருந்த சீட்டும் காலி

வாஷிங்டன்: நடுவானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது, அதே கதவு அப்படியே பெயர்ந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக விமான போக்குவரத்து என்பது பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கிறது. விமானங்களில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதால் அதில் விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இருப்பினும், அதையும் கூட தாண்டி சில நேரங்களில் விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளன. இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பமவ் தான் இப்போது நடந்துள்ளது.

அமெரிக்க விமானம்: அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்த போது, அதன் கதவு ஒன்று அப்படியே பெயர்த்துக் கொண்டு பறந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஏர்போர்ட்டில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. நடுவானில் அந்த கதவு பறந்த நிலையில், அருகே இருந்த இருக்கை ஒன்றும் பறந்துள்ளது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த இருக்கையில் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேநேரம் இந்த விபத்தில் யாராவது காயமடைந்தார்களா என்பது குறித்து உறுதியாக எந்தவொரு தகவலும் இல்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விமானத்தின் பின்புற மிட் கேபின் கதவு சுவருடன் அப்படியே பெயர்ந்துள்ளது தெரிகிறது.

எமர்ஜென்ஸி கதவு: இந்த கதவு எமர்ஜென்ஸி கதவாக இருந்துள்ளது. இருப்பினும், இதை அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயன்படுத்தவில்லை. எனவே, அந்த விமான கதவு பிளக் செய்யப்பட்டு இருந்துள்ளது. அந்த கதவு தான் நடுவானில் பெயர்ந்து சென்றுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-9 மேக்ஸ் என்ற மாடலில் இந்த விபத்து நடந்துள்ளது.

விமானம் ஒன்ராறியோவுக்கு புறப்பட்ட நிலையில், கொஞ்ச நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி விமானம் மீண்டும் போர்ட்லேண்டில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானம் 16,000 அடி உயரத்திற்குச் சென்றுள்ளது. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. பிறகு விமானம் உடனடியாக கீழே இறங்கத் தொடங்கியதை டேட்டா தரவுகள் காட்டுகிறது.

அச்சம்: இந்தச் சம்பவத்தால் விமானத்தில் பயணித்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து 22 வயதான பயணி ஒருவர் கூறுகையில், “எல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. நான் கண்களைத் திறந்து பார்க்கும் போது எனக்கு முன்னால் ஆக்சிஜன் மாஸ்க்குகள் தான் இருந்தது. விமானத்தின் பக்கவாட்டில் சிறு பகுதியே மாயமாகி இருந்தது. அனைவரும் சாகப் போகிறோம் என்றே முதலில் நினைத்தேன். நல்வாய்ப்பாக விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினர்” என்றார்.

இது குறித்து விமான வல்லுநர்கள் கூறுகையில், “பயணிகள் எந்தளவுக்கு அச்சத்தில் உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவம் நடந்த போது மிக மிக அதிக சத்தம் ஏற்பட்டு இருக்கும். மேலும், காற்றும் படுவேகமாக கேபினுக்குள் நுழைந்து இருக்கும். இது அங்கே மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும்” என்றார்.

என்ன நடந்தது: இந்த புத்தம் புதிய விமானம் கடந்தாண்டு நவ. மாதம் தான் சர்டிபிக்கேட் பெற்றது. சில மாதங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ள அதிகாரிகள், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை” என்றனர்.

போயிங் நிறுவனம் தரப்பில் இது குறித்துக் கூறுகையில், “அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இதுபோன்ற விபத்து நடந்துள்ளது எங்களுக்குத் தெரியும்.. நாங்கள் விமானம் குறித்துக் கூடுதல் தகவல்களைப் பெற முயன்று வருகிறோம். போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here