ஜார்ஜ் டவுன்:
அனைத்துலக ரீதியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக அறியப்படும் பினாங்கு மாநிலம் புறாக்களால் நிரம்பி வழிகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக புறாக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், மொத்தம் 3,419 புறாக்கள் இருந்தன, அதன் பின்னர் புறாக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது – அதாவது 2019 இல் 3,811 புறாக்களும்; 2020 இல் 6,848 புறாக்களும்; 2021 இல் 5,572 புறாக்களும் ; 2022 இல் 5,020 புறாக்களும் ; கடந்த ஆண்டு அக்டோபர் 31 வரை 5,735 புறாக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் 56 வயதான பெளசியா சமாட் என்ற ஒரு அரிசி விற்பனையாளர் கூறுகையில், கடந்த 2021 இல் தனது ஐந்து வயது மகனுக்கு புறாக் கழுவுகளுடன் தொடர்புடைய சிட்டாகோசிஸின் அறிகுறிகள் தோன்றியதால், அவரை கவனித்துக்கொள்ள தான் தனது வியாபாரத்தை சிறிது காலம் நிறுத்த வேண்டியிருந்தது, என்று அவரது தாயார் கூறினார்.
“என் மகன் எனது கடைக்கு அருகில் எப்போதும் இருக்கும் புறாக்களுடன் விளையாடுவதையும், அவற்றுக்கு உணவளிப்பதையும் விரும்பினார். ஒரு நாள், அவருக்கு திடீரென அதிக காய்ச்சல் மற்றும் இருமல் வந்தது, அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதாயிற்று” என்றார்.
“பின்னர் அவருக்கு மூளையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. நான் அவரைக் கவனித்துக்கொள்வதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதமாக வேலை செய்வதை நிறுத்திவிட்டேன், ”என்று அவர் கவலையுடன் கூறினார்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கிளமிடியா பிசிட்டாசி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பறவைகளின் உலர்ந்த கழிவுகள், சுவாச சுரப்பு மற்றும் இறகு தூசி ஆகியவற்றை சுவாசமு மூலம் உள்ளிழுக்கும் மனிதர்களுக்கு சிட்டாகோசிஸ் நோய் பரவுகிறது.
அதே நேரத்தில் ரோஸ் என்ற பெயரில் மட்டுமே அறியப்படும் ஒருவர் கூறுகையில், தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லேசான நுரையீரல் நோய்த்தொற்றால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறினார்.
“தான் தினமும் மாலையில் வீட்டிற்கு வெளியே அவர்களுக்கு உணவளித்ததாகவும், அவற்றின் எச்சங்களும் இறகுகளும் என் தாழ்வாரம் முழுவதும் இருந்தன. அதனால்தான் நான் நோய்வாய்ப்பட்டேன் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இப்போது, நான் புறாக்களைப் பார்க்கும்போது, அவற்றை அதிகமாக நெருங்குவதைத் தவிர்க்க முயற்சிக்கிறேன், ”என்று அவர் கூறினார்.





















