கோலாலம்பூர்:
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (ஜனவரி 8) முதல் மறு அறிவிப்பு வரும்வரை ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 25ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த திடீர் வெள்ளம் தைப்பூசத்திற்கான முன்னேற்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தலாம் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பகாங்கில் மொத்தம் 896 பேர் தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அங்குள்ள 23 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ரொம்பினில் 371 பேர் , மாரானில் 301 பேர் மற்றும் பெக்கானில் 224 பேரும் தங்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.





















