ஓய்வூதியைத்தை குறைக்கும் செயல் தற்கொலைக்கு சமம்: அரசியல் ஆய்வாளர்கள்

கோலாலம்பூர்:

நாட்டுல் புதிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் அரசின் முடிவு, செலவினத்தை குறைக்க அரசு எடுத்திருக்கும் தைரியமான முடிவு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் திட்டம் மலேசியாவின் 1.7 மில்லியன் அரசு ஊழியர்களில் பெரும் பங்கு வகிக்கும் மலாய் இன வாக்காளர்களை தனிமைப்படுத்தும் ஆபத்து உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் ஓய்வுபெற்றுள்ள 900,000 அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 2024ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 32 பில்லியன் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அரசு செலவினத்தில் 10 விழுக்காடு அளவுக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓய்வூதியத்தைக் குறைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் 2040ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 120 பில்லியனுக்கு உயரும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

ஓய்வூதியத்தைக் குறைக்கும் திட்டத்தை அமல்படுத்த நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். அன்வாரின் அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பெரும்பான்மை உள்ளதால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதில் பிரச்சினை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் பரிந்துரை 1990களில் இருந்து பரிசீலிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், ஆட்சியிலிருக்கும் எந்த அரசுக்கும் அதை அமல்படுத்த அரசியல் உறுதி இருந்ததில்லை என்றுன்பிரதமர் கூறினார்

“நாடு திவாலாகி எதிர்காலத் தலைமுறையினர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் புதிய அரசு சேவைத் திட்டம் அவசியம்,” என்று அன்வார் ஜனவரி 28ஆம் தேதி கருத்துரைத்தார்.

ஆனால், அன்வாரின் இந்தத் திட்டம் அவரது கூட்டணி அரசுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“ஓய்வூதியத் திட்டம் நாட்டை திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற உண்மை நிலையை எடுத்துக்கூறுவதில் அன்வார் உண்மையைக் கூறுகிறார் என்றாலும், இதனால் அவருடைய அரசுக்கு வாக்கு இழப்பு ஏற்படலாம். அது அரசியல் தற்கொலைக்கு கொண்டு செல்லலாம்,” என்று மலாயா பல்கலைக்கழக சமுதாய அறிவியல் துறை ஆய்வாளரான அவாங் அஸ்மான் பவி சொல்கிறார்.
அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் கடந்த 2022ஆம் ஆண்டுத் தேர்தலில் மலாய் சமூகத்தினரின் வாக்குகளில் 11 விழுக்காட்டையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here