ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையுடன் கை கோர்ப்பதா? சுவிஸ் அரசுக்கு எம்பிக்கள் சரமாரி கேள்வி

சுவிட்சர்லாந்து:  ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். உலகத் தமிழர் இயக்கம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

இவைதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் சிறீலங்கா அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது. சுவிஸ் அரசின் இந்த நிலைப்பாடானது சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு ஐயப்பாட்டையே தோற்றுவித்து வருகின்றது.

இவ்வாறான சூழமைவில் டிசம்பர் 21, 2023 அன்று MOLINA FABIAN தலைமையிலான ஐந்து சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சுவிஸ் அரசாங்கத்திடம் ஏழு வெளிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். ழுப்பப்பட்ட கேள்விகள்:

1. நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணையையும் அதன் தொடர்ச்சியான அரசியல் தீர்வையும் நடைமுறைப்படுத்த சுவிஸ் அரசாங்கம் எவ்வாறு ஆதரவு வழங்குகின்றது?

2. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டத் தவறிய சிறீலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட “உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை” பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்களும்,

3.ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் விமர்சித்திருக்கின்ற சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எவ்வாறு ஆதரவளிக்கிறது?

4. புலம்பெயர் அமைப்பு மற்றும் பௌத்த பிக்குகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட “இமயமலைப் பிரகடனத்தை” பெரும் பகுதியான தமிழ் கட்சிகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகள் போன்றவற்றால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து எந்தவகையில் ஆதரிக்கிறது? இது குறித்து சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்திடம் எந்தவொரு கருத்தாய்வும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?

5. சர்வதேச ரீதியில் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து அரசு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது?

6. இலங்கையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் சித்திரவதைக்கு உற்படுத்தப்படுவதுடன் கொலை செய்யப்படுவதாகவும் தற்போதும் அறிக்கைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந் நிலையில் சுவிசில் இருந்து இலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் போது அவர்களின் பாதுகாப்பிற்கு சுவிட்சர்லாந்து எவ்வாறு உத்தரவாதம் அளிக்கிறது?

7. 2023 இல் இலங்கைக்கு எத்தனை பேர் நாடு கடத்தப்பட்டார்கள்?

இவர்களின் இக்கேள்விகளுக்கான பதில்களை விரைவில் சுவிஸ் அரசு வெளியிடவுள்ளது. இத்தருணத்தில் எம் இனம் சார்பில் கேள்விகள் எழுப்பிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குறித்த பாராளுமன்ற உறுபினர்களுக்கு சுவிஸ் வாழ் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர் இயக்கமாகிய நாங்கள் இம் முயற்சியை வரவேற்பதுடன் உளப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடையங்களிலும் நிலையான மற்றும் பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு உலகத் தமிழர் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களுடனான நேரடியான தொடர்பாடல்களைப் பேணுவதனூடாக தமிழர் இனப் பிரச்சனை தீர்வு தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள சுவிஸ் அரசை வலியுறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம். இவ்வாறு உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here