2 மாசம்தான் அவகாசம்.. உடனே எங்க நாட்டில் இருந்து வெளியேறுங்க… இந்தியாவுக்கு கெடு விதித்த மாலத்தீவு

மாலத்தீவு: இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய சில சர்ச்சை கருத்துகளே இந்த மோதலுக்குக் காரணமாகும்.

இந்த விவகாரத்தையடுத்து மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்று கூட இந்தியாவில் குரல்கள் எழுந்தன. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இப்போது மேலும் சிக்கலானதாக மாறியிருக்கிறது.

கெடு விதித்த மாலத்தீவு அரசு: வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் தரப்பில் இந்த வேண்டுகோளைப் பிறப்பித்துள்ளனர்.

கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின் போதே முய்ஸு, இந்தியாவுடனான உறவுகளைக் குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார். அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தையும் வெளியேற்றுவேன் என்பதை முன்வைத்து இந்தியா அவுட் என் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தார். தொடர்ந்து அதிபராகத் தேர்வான பிறகு அவர் கடந்த நவ. மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.

என்ன சொன்னார்: இது குறித்து மாலத்தீவு அதிபரின் செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறுகையில், “இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்க முடியாது. இது அதிபர் டாக்டர் முகமது முய்சுவின் கொள்கை முடிவு” என்று தெரிவித்தார். கடந்த வாரம் தான் மாலத்தீவு அதிபர் முய்ஸு சீனாவுக்குச் சென்று திரும்பிய நிலையில், இப்போது இந்த உத்தரவு வந்துள்ளது. மாலத்தீவில் சுமார் 88 இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தனை பேரையும் அங்கிருந்து வெளியேற்ற மாலத்தீவு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு ராணுவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாலத்தீவும் இந்தியாவும் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட மையக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் இந்திய உயர் தூதர் முனு மஹாவாரும் கலந்து கொண்டார்.

மார்ச் 15 வரை டைம்: இந்த மீட்டிங்கை உறுதி செய்த மாலத்தீவு அதிபர் செயலாளர் நாஜிம், இந்த மார்ச் 15க்குள் வீரர்களைத் திரும்பப் பெறுவது குறித்தே ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்திய அரசு இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு கருத்துகளையும் கூறவில்லை.

எதற்காக: மாலத்தீவில் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை நிர்வகிக்க சுமார் 70 இந்திய வீரர்கள் அங்கே உள்ளனர். மேலும், மாலத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திலும் இந்தியப் போர்க் கப்பல்கள் ரோந்து பணிகளை மேற்கொள்கிறது. தீவுகளின் கூட்டமான மாலத்தீவில் திடீரென யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்படும் போது அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இந்திய விமானங்களே பயன்படும். இதற்காகவே இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here