கோலாலம்பூர் :
சரவாக் மாநிலத்தின் கூச்சிங், கம்போங் சாபிட் பகுதியில் நேற்று நடைபெற்ற கிராமப்புற சமூக நல நிகழ்ச்சி ஒன்றின் போது, எதிர்பாராதவிதமாக 6 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் சறுக்கி விழுந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உடல் மற்றும் தலையில் பலத்த காயமடைந்தார்.
நேற்று மதியம் 12.20 மணியளவில் வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சிபுரான் (Siburan) நிலையத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Bomba) வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விபத்து நடந்த கிராமத்திற்குச் செல்லும் பாதைகள் மிகவும் குறுகலாக இருந்ததால், மீட்புக் குழுவினர் மதியம் 2.08 மணியளவிலேயே சம்பவ இடத்தை அடைய முடிந்தது. ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த அந்த போலீஸ் அதிகாரியின் முதுகு, கைகள் மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் ‘ஸ்ட்ரெச்சர்’ (Stretcher) மூலம் பத்திரமாக மேலே தூக்கி வரப்பட்டார்” என்று தீயணைப்புத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்ட அவருக்குத் தீயணைப்புப் படையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகச் சரவாக் பொது மருத்துவமனைக்கு (Sarawak General Hospital) அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த இக்கட்டான மீட்புப் பணி நேற்று பிற்பகல் 3.03 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




















