லட்சக்கணக்கான சுற்றுப்பயணிகளை சுண்டி இழுக்கும் தைப்பூச உற்சவம்!

லேசிய சுற்றுலா காலண்டரில் தைப்பூச உற்சவம் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் அதன் வண்ணக் கலவைகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணிகளைக் கவர்ந்திருக்கிறது.

வண்ண வண்ணக் காவடிகள், அலங்காரங்கள், இந்தியக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை, பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் ஒரு பிரமாண்ட விழாவாக தைப்பூச உற்சவம் திகழ்கிறது.

மலேசியாவைப் பொறுத்தவரை நாடு முழுவதும் தைப்பூசம் கொண்டாடப்பட்டாலும் உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களாக பத்துமலை, பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை ஆலயங்களின் தைப்பூச உற்சவம் இடம்பிடித்திருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச உற்சவம் 3 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். தைப்பூசத்திற்கு மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும் விடுமுறை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. தங்க ரதம், வெள்ளி ரதம் ஊர்வலங்களோடு பத்துமலையிலும் பினாங்கிலும் இக்கொண்டாட்டம் களைகட்டும்.

பத்துமலை

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளைக் கடந்த பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஒவ்வொரு தைப்பூசத்தின்போதும் கிட்டத்தட்ட 20 லட்சம் பக்தர்கள் ஒன்றுதிரள்வர். இவர்களுள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் கணிசமான அளவில் இடம்பெற்றிருப்பர்.

பக்தர்கள் 272 படிகளை ஏறிச்சென்று மலைக்குகையில் உள்ள திருமுருகப் பெருமானுக்கு தங்களது காணிக்கைகளைச் செலுத்துவர். சுற்றுப்பயணிகளும் அவர்களைப் பின்தொடர்ந்து மலைக்குகைக்குச் சென்று அங்கு நடைபெறும் வழிபாடுகளைக் கண்டு மகிழ்வர்.

பினாங்கு

பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் 160 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இங்கு பக்தர்கள் தைப்பூசத் திருநாளின்போது 513 படிகளை ஏறிச் சென்று திருமுருகனுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.

காலை வேளையில் தங்க ரதமும் வெள்ளி ரதமும் புறப்பட்டு வழி நெடுகிலும் பக்தர்களுக்குக் காட்சி அளித்து மலைக்கோவிலைச் சென்றடையும். சீன பக்தர்களின் பக்திப் பரவசம் சுற்றுப்பயணிகளுக்குக் கண்கவர் விருந்தாக அமையும். வழிநெடுகிலும் பல லட்சம் தேங்காய்களை உடைத்து அவர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவது மலேசியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

மூன்று தினங்கள் நடைபெறும் இந்தப் பினாங்கு தைப்பூச உற்சவத்திற்குக் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் திரள்வர். சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

பேராக்

பேராக் சிரோ மலையில் அமைந்திருக்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியத்தின் தைப்பூச உற்சவமும் உலகப் புகழ்பெற்றது.

இங்கு ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வர். இவர்களோடு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும்.

இந்த மூன்று தைப்பூச உற்சவங்களிலும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பல்லாயிரக்கணக்கில் ஒவ்வோர் ஆண்டும் கலந்து கொள்வது தைப்பூச உற்சவத்தின் உன்னதத்தைப் பிரதிபலிக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வடிவேலா பெல் என்ற ஆஸ்திரேலியர் ஒவ்வோர் ஆண்டும் பெரிய காவடியைச் சுமந்து ஆடி வருவது சுற்றுப்பயணிகளுக்கு இன்னொரு கண்கவர் காட்சியாக இருக்கும்.

வருகை ஆண்டு

2024ஆம் ஆண்டு சற்று கூடுதல் விசேஷம் பெற்றிருக்கிறது. குறிப்பாக பினாங்கு, பேராக், மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களும் 2024 வருகை ஆண்டைப் பிரகடனம் செய்து மிகப்பெரிய அளவில் அதற்குரிய விளம்பரங்களைச் செய்து வருகிறது.

இவ்வாண்டு இந்த மூன்று மாநிலங்களின் சுற்றுலா அட்டவணையில் தைப்பூச உற்சவம் மகத்தான ஒரு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. தைப்பூச உற்சவம் மலேசிய சுற்றுலாத்துறைக்கு எழுச்சியையும் மிகப்பெரிய உத்வேகத்தையும் தரவல்லதாக இதுவரை அதன் வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here