ஜோகூர் பாரு:
நாட்டின் 17ஆவது பேரரசராக பதவியேற்கவுள்ள மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தரை வழி அனுப்பும் விழாவைக் காண சுமார் 30,000 ஜோகூர்வாசிகள் வரும் புதன்கிழமை (ஜனவரி 31) கூடுவார்கள் என்றும், அவர்கள் 35 கி.மீ தூரம் வரை பயணிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
ஜோகூர் சுல்தான் புதன்கிழமை காலை சுமார் 8 மணிக்கு இஸ்தானா புக்கிட் செரீனில் இருந்து புறப்பட்டு நேராக செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ரோயல் ஹேங்கருக்குச் செல்வார் என்று ஜோகூர் காவல் துறைத் தலைவர் எம். குமார் கூறினார்.
“இஸ்தானா புக்கிட் செரீனில் இருந்து காலை 8 மணிக்கு மாண்புமிகு ஜோகூர் சுல்தான் தனது பயணத்தைத் தொடங்குவார் என்றும், அவர் ஒரு மணி நேரத்தில் ரோயல் ஹேங்கரை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வழி நெடுகிலும், சுமார் 20,000 முதல் 30,000 வரை ஆயிரக்கணக்கான ஜோகூரியர்கள் இருப்பார்கள் என்றும், அவர்கள் சுல்தானுக்கு ஆரவாரம் செய்து தங்கள் ஆதரவைக் காட்டுவார்கள்,” என்றும் அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்தப் பயணம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சுமார் 1,200 போலீசார் மற்றும் பிற துணை ஏஜென்சிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
முக்கியமாக காலை 7.45 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு 35.5 கிமீ சாலை மூடப்படும். எனவே காலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பவர்கள் சீக்கிரம் கிளம்பிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக எங்கள் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.




















