பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; 61 வயது சிங்கப்பூர் தமிழருக்கு சிறை

சிங்கப்பூர்:

போதையில் பணிப்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் விடுத்தது மற்றும் ஆயுதத்தால் ஒருவரை தாக்கியது உள்ளிட்ட புகார்களில், சிங்கப்பூர் தமிழர் ஒருவருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிங்காரம் பழனியப்பன் என்ற தமிழ் பின்புலத்தைக் கொண்ட இவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று, அபார்ட்மென்ட் பணிப்பெண் ஒருவரிடம் தனக்கு வெளியிலிருந்து உணவு வாங்கி வருமாறு கோரியிருக்கிறார். அத்தோடு தனக்கு மதுவும் வாங்கி வருமாறு அவர் வற்புறுத்தியதற்கு, அந்தப் பெண் மறுத்திருக்கிறார்.

இதனையடுத்தி கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணை சம்மதிக்கச் செய்திருக்கிறார். மேலும் பணிப்பெண்ணின் பதிலில் திருப்தி அடையாதவராக அப்பெண்ணை துரத்திச் சென்று லிஃப்டிலும் கலாட்டா செய்திருக்கிறார்.

20 மாடிகள் கொண்ட அந்த அடுக்ககத்தின் லிஃப்டில் மேலும் கீழுமாக லிஃப்ட் இயக்கத்தை முடுக்கிவிட்டு, பணிப்பெண் வெளியேறாத வகையில் சிங்காரம் முடக்கியிருக்கிறார்.

மேலும், லிஃப்டில் அடைபட்டிருந்த நேரத்தில், பணிப்பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான சீண்டல்களையும் தொடுத்திருக்கிறார். சிங்காரத்தின் சேட்டைகள் அனைத்தும் லிஃப்ட் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

பின்னர் பணிப்பெண் போலீசுக்குப் போனதும் வீடியோ ஆதாரத்துடன் சிங்காரம் வசமாய் சிக்கினார்.

ஆனால், அந்த வழக்கில் அடுத்த நாளே அவர் பிணையில் வெளியே வந்தார். அப்படி வெளியில் உலாத்தியவர், சும்மாயிருக்காது கடைக்காரர் ஒருவரை தாக்கியதில் மீண்டும் கைதானார்.

தனது குடியிருப்பு அருகே சைக்கிள் கடைக்காரர் ஒருவருடனான வாக்குவாதத்தில், சைக்கிள் செயினை முஷ்டியில் முறுக்கி கடைக்காரர் முகத்தில் சரமாரி குத்துக்கள் விட்டிருக்கிறார். இந்த தாக்குதல் தொடர்பாக கடைக்காரர் போலீசில் புகார் செய்ததும், சிங்காரம் வசமாய் மாட்டினார்.

பாலியல் சீண்டல் வழக்கில் பிணையில் சென்றவர், வன்முறை தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

சிங்காரம் பழனியப்பனால் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழுவதான குற்றச்சாட்டில், இம்முறை அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உடனடியாக அவரை சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு கட்டுபாடுகள் மற்றும் அவை தொடர்பான தண்டனைகள் கடுமையானவை மற்றும் உடனடியானவை என்று தெரிந்தும் சேட்டையில் ஈடுபட்ட சிங்காரம் தற்போதும் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here