பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் வைக்கப்பட்டுள்ள மோனா லிசா ஓவியத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் சூப்பை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக சிறந்த ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படும் மோனா லிசா ஓவியம் இப்போது பாரீஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே பலத்த பாதுகாப்பில் இந்த ஓவியம் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகம் இருந்தாலும் கூட லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள இந்த ஓவியத்தை அனைவரும் கண்டு ரசிக்கலாம். இதற்கிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை அந்த மோனா லிசா ஓவியம் மீது சிலர் சூப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோனா லிசா: ஆரோக்கியமான நிலையான உணவு வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் மோனா லிசா ஓவியம் மீது சூப்பை வீசியுள்ளனர்.. பிரான்ஸ் நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் போராட்டக்காரர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி ஓவியத்திற்கு அருகே செல்வதும் மோனா லிசா ஓவியம் மீது சூப் வீசுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த பெண்கள் அணிந்துள்ள டீசர்ட்டில் “FOOD RIPOSTE” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், அந்த பெண்கள், “நமக்கு மிகவும் முக்கியமானது என்ன? கலை முக்கியமா இல்லை. ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுக்கான உரிமை முக்கியமா” என்று கோஷமிட்டுள்ளனர்.
என்ன நடந்தது: மேலும், “நமது விவசாய முறை மோசமாக உள்ளது. நமது விவசாயிகள் உயிரிழந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றும் அவர்கள் கூறுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டதாக பாரீஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தால் லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த படைப்பான மோனா லிசா ஓவியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதை லூவ்ரே அருங்காட்சியகம் உறுதி செய்துள்ளது. பொதுவாக மோனா லிசா ஓவியத்தைப் பாதுகாக்க அதற்கு முன்பு கண்ணாடியை வைத்திருப்பார்கள். அவர்கள் வீசிய சூப் இந்த கண்ணாடி மீது தான் பட்டுள்ளது. இதன் காரணமாகவே மோனா லிசா ஓவியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
போராட்டம்: இந்த போராட்டத்தில் FOOD RIPOSTE என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஃபுட் ரிபோஸ்ட் அமைப்பு பிரான்ஸ் அரசு அதன் காலநிலை கடமைகளை மீறுவதாகச் சாடுகிறது. மேலும், விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தைத் தர வேண்டும் என்றும் நாடு முழுக்க இருக்கும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க உள்ள மக்களுக்கு இலவச சிகிச்சை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
அந்நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.