மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் தென் ஹாக் அவ்வணி ஆட்டக்காரர் ரஷ்போர்ட் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகத் தெரிகின்றது. நேற்று முன்தினம் ரஷ்போர்ட் வெளியே சென்றதால் யுனைடெட் அணியின் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் அதற்கு முன்னதாக தமக்கு உடம்பு சரியில்லை என்று அவர் எரிக் தென்னிடம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்திருக்கின்றார்.
இருப்பினும் நேற்று முன்தினம் அவர் வட அயர்லாந்தில் உள்ள இரவு கேளிக்கை மையத்தில் இருக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இதனால் நிர்வாகிக்கும் ரஷ்போர்ட்டிற்கும் மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை ஆட்டத்திற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய எரிக் தென் ஹாக், ரஷ்போர்ட்டிற்கு உடம்பு சரியில்லை என்று கூறியிருந்தார். ஆனாலும் அதனை மீறி ரஷ்போர்ட் கேளிக்கை மையத்திற்கு சென்றிருப்பதால் எரிக் தென் ஹாக் கடுங்கோபம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கெனவே ரஷ்போர்ட் பயிற்சிக்கு முறையாக வரவில்லை என்பதால் எரிக் தென் ஹாக் அவரை முதன்மை அணியிலிருந்து சில காலத்திற்கு நீக்கியிருந்தார். தற்போது மீண்டும் இதுபோன்ற சர்ச்சை எழுந்துள்ளதால் ரஷ்போர்ட் மீது அவர் முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகின்து.









