திருமணம் சட்டவிரோதமானது; இம்ரான் ஹான் தம்பதிக்கு 7 ஆண்டு சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் ஹான், சட்டவிரோத திருமணம் செய்ததாக அவருக்கும், அவரது மனைவிக்குமாக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

பிப்.8 அன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசத்தின் முக்கிய கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் ஹான் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளில் தண்டனை தீர்ப்புகளுக்கு ஆளாகி வருகிறார். இந்த வகையில் ஒரே வாரத்தில் மூன்றாவது நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது.

அதில் 2018-ம் ஆண்டு புஸ்ரா பிபி-யை இம்ரான் கான் மணந்தது சட்டவிரோத திருமணம் என்று அறிவித்த நீதிமன்றம், அதற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்பதற்கு 7 மாதங்களுக்கு முன்பாக புஸ்ரா பிபியை இம்ரான் கான் நிக்காஹ் புரிந்தார். ஆனால் முதல் கணவரை விவாகரத்து செய்த புஸ்ரா, அடுத்த திருமணத்துக்கான காத்திருப்பு காலமான ‘இத்தாத்’ என்றழைக்கபப்டும் காத்திருப்புக் காலத்தை முறையாக முடிக்கவில்லை என அப்போதே குற்றம்சாட்டப்பட்டது.

அது தொடர்பான வழக்கில் தற்போது இம்ரான் கான் – புஸ்ரா பிபி தம்பதி 7 ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளாகி உள்ளனர். முன்னதாக இதே வாரத்தில் வெளியான வேறு 2 வழக்குகளின் நீதிமன்ற தீர்ப்புகளிலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் இம்ரான் ஹான்.

அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக 10 ஆண்டுகளும், சட்டவிரோதமாக அரசு பரிசுகளை விற்றதற்காக அவரது மனைவியுடன் 14 ஆண்டுகளுமாக, இருவேறு வழக்குகளில் இம்ரான் ஹான் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதில், 71 வயதாகும் இம்ரான் ஹான் மீது நூற்றுக்கும் மேலான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றாக விசாரணைகள் நிறைவுற்று தீர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பல்லாண்டு சிறைத் தண்டனை விதிப்புடன் அரசியல் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியடவும் இம்ரான் ஹானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட இம்ரான் ஹான் விண்ணப்பித்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனுக்களும், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே இம்ரான்கானுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், மேல் முறையீட்டில் கரைந்துபோகக் கூடியவை என்றும் இம்ரான் ஹான் கட்சியினர் வாதிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here