கோத்தா கினாபாலு:
சபாவின் கிழக்குக் கடற்கரை பகுதியானா தாவாவ் மாவட்டத்தின் ஜாலான் நாசிப் கிந்தாவில் உள்ள கம்போங் மங்கா என்ற இடத்தில், நீச்சல் குளத்தில் விழுந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
41 வயதான இந்தோனேசிய பெண்ணான சுரியானி அமீர் மற்றும் அவரது ஏழு வயது மகன் ரிஸ்டி ரூடி ஆகியோர் நேற்று (பிப்ரவரி 6) நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியதாக தாவாவ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்தார்.
எனவே, இந்த சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியதாகவும், இவ்வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தி, விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
போலீசாரின் மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், குளத்திற்குச் சென்ற சிறுவன் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது, தாய் அவரைக் காப்பாற்ற உள்ளே குதித்தகாக அறிய முடிகிறது.
அவர்களது உடல்கள் குளத்தில் மிதந்ததைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக அவர் மேலும் கூறினார்.









