நவால்னி மரணமா? ரஷ்யாவை நம்ப முடியாது.. சந்தேகத்தை கிளப்பும் மனைவி

மாஸ்கோ: சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் அலெக்சி நவால்னி மரணம் அடைந்து விட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா கூறியிருக்கும் இந்த தகவலை நம்ப முடியாது என்றும் நவால்னி மரணம் அடைந்தது உண்மையென்றால் புடினை தண்டிக்காமல் விடக்கூடாது எனவும் நவால்னியின் மனைவி ஆவேசமாக கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபராக இருந்து வருபவர் விளாடிமிர் புடின். தனது அதிரடி நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்திருக்கும் புடின், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். ராணுவ வல்லமையும் மிக்க நாடாக இருக்கும் ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனால் ஒட்டு மொத்தமாக நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் பகையையும் புடின் சம்பாதித்துக் கொண்டார்.

ரஷ்யாவின் எல்லைக்கு வெளியே மட்டுமன்றி உள்ளேயும் எதிர்ப்பாளர்களை விரும்பாதவராக புடின் அறியப்படுகிறார். எதிர்க்கட்சிகள் ரஷ்யாவில் உள்ளன. தேர்தல்களும் நடைபெறுகிறது. ஆனாலும், தொடர்ந்து வெற்றி பெற்று வரும் புடின், மன்னர் போலவே ஆட்சி நடத்தி வருகிறார். ரஷ்யாவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புடினுக்கு அரசியல் ரீதியாக அலெக்சி நவால்னி கடும் நெருக்கடியை கொடுத்தார்.

நவால்னி மரணத்தில் சந்தேகம்?: நவால்னியின் குற்றச்சாட்டுக்களால் புடினுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இத்தகைய சூழலில் ஊழல் குற்றச்சாட்டில் அலெக்சி நவால்னி கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நவால்னி, சிறைச்சாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவால்னி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ரஷ்யாவில் புடினுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நவால்னி மனைவி பேச்சு: நவால்னிக்கு ஏற்கனவே ஜெர்மனியில் வைத்து விஷம் வைத்து கொல்ல முயற்சி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு ரஷ்யா மீதே ஜெர்மனி கை காட்டியது. இதனால், நவால்னி மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், தனது கணவர் நவால்னி மரணம் அடைந்து இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையென்றால் புடினையும் அவரது உதவியாளர்களையும் தண்டிக்காமல் விடக்கூடாது என்று யுலியா நவலன்யா கூறியுள்ளர்.

புடினை நம்ப முடியாது: ஜெர்மனியின் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நவல்ன்யா கூறியதாவது:- தனது கணவர் அலெக்ஸி நவால்னி மரணம் அடைந்து வெளியாகும் செய்தியில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஏனெனில், இது ரஷ்ய அரசாங்க வட்டாரத்தில் இருந்து வந்திருக்கிறது. புடினையோ அவரது அரசாங்கத்தையோ நம்ப முடியாது.

கொடூரமான ஆட்சி: ஆனால் நவால்னி மரணம் அடைந்தது உண்மையாக இருந்தால், புடின் மற்றும் அவரது மொத்த சகாக்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதற்கான காலம் வெகுவிரைவில் வரும். ரஷ்யாவில் நடந்து வரும் கொடூரமான ஆட்சிக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும். ரஷ்யாவில் நடைபெறும் அனைத்து கொடூரமான விஷயங்களுக்கும் புடினும் அவரது அவரது ஆட்சி நிர்வாகமும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here