பேங்காக்:
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) பரோலில் விடுவிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் முதன்முறையாக அவர் தாய்லாந்தில் சுதந்திரமாக இருக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தாய்லாந்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தக்சின் அந்நாட்டைவிட்டுத் தப்பியோடினார். அவருக்கு எதிராக பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருந்தது.

தக்சினுக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை தாய்லாந்து மன்னர் ஓராண்டுக்குக் குறைத்தார். அதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக அவர் மருத்துவமனையில் தடுப்புக் காவலில் இருந்து வந்தார்.
74 வயதாகும் தக்சின் இன்று கறுப்பு நிற மெர்சிடிஸ் வாகனத்தில் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கண்டனர். அந்த வாகனத்தில் அவரது மகளும் ஆளும் கட்சியான ஃபியு தாய் கட்சியின் தலைவருமான பய்த்தொங்டார்ன் ஷினவத்ராவுக்கு அருகே அவர் அமர்ந்திருந்தார்.
சுமார் 25 நிமிடங்கள் கழித்து அந்த வாகனம் அவர்களின் குடும்ப பங்ளாவைச் சென்றடைந்தது என்று கூறப்படுகிறது.



















