(கோகி கருணாநிதி)
ஜோகூர்:
வரவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெர்லிங், புக்கிட் பத்து தொகுதிகளில் ம.இ.கா. தேர்தல் கேந்திரம் அறிமுக விழா திறப்பு நிகழ்வு இன்று உற்சாகமாக நடைபெற்றது.
ம.இ.கா. தேசியத் தலைவரான டான் ஸ்ரீ விக்னேஷ்வரன் இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
புக்கிட் பத்து தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 500 தேர்தல் கேந்திர உறுப்பினர்கள் பங்கேற்று, தேசிய முன்னணியின் வெற்றிக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதியளித்தனர்.
அதேவேளை, பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் கேந்திரம் அறிமுக நிகழ்வில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ம.இ.கா. தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
பெர்லிங் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னால் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ நோர் ஜஸ்லான், பூலாய் ம.சீ.ச. தொகுதித் தலைவர், ம.இ.கா. தேசிய துணைத் தலைவரான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெர்லிங் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு சுமார் 780 உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
பெர்லிங் தொகுதியில் இந்திய வாக்காளர்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில், இந்திய சமூகத்தின் வலுவான ஆதரவு தேசிய முன்னணியின் வெற்றிக்குப் பெரும் பலமாக அமையும் என ம.இ.கா தேசிய தலைவர் தெரிவித்தார்.
இதனிடையே, புக்கிட் பத்து தொகுதியிலும் தேர்தல் கேந்திரம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அத்தொகுதியில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதால், தேர்தல் வெற்றியில் அவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் எனக் கூறப்பட்டது.
நிகழ்வில் பேசிய நூர் ஜஸ்லான், பூலாய் நாடாளுமன்றத்தில் உள்ள 12.9 % இந்திய வாக்காளர்களின் ஆதரவு மேலும் 7 விழுக்காடாக அதிகரித்தால், எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தொகுதியும் ம.இ.கா கைவசமாகலாம் என்று நோர் ஜஸ்லான் உரையில் தெரிவித்ததை விக்னேஸ்வரன் தமது உரையில் மீண்டும் பதிவு செய்தார்.
வரவிருக்கும் ஜோகூர் மாநில 16வது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து தேர்தல் கேந்திரங்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என டான் ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.





















