மோசடி வழக்கு; நடிகை ஜெயலட்சுமியை மார்ச் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

சென்னை:

மோசடி வழக்கில் கைதான நடிகை ஜெயலட்சுமியை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர். வரும் மார்ச் மாதம், 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சினிமா பாடலாசிரியர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி சினேகன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார். அதில், ’சினேகம் ஃபவுண்டேஷன்’ என்றத் தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், இதனால் தனக்கும், தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவி, நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் ‘சினேகம் ஃபவுண்டேஷன்‘ தனக்கு தான் சொந்தம் என்றும் இதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், தன்மீது பொய் புகார் அளித்த பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இருவரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்,கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீஸார் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுபடி 2022 அக்டோபர் மாதம் 19-ம் தேதி திருமங்கலம் போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, எவ்வித ஆதாரமும் இல்லாமல் கவிஞர் சினேகன் அளித்த புகாரில், தன் மீது பதிவு‌ செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை ஜெயலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணையில், திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு‌ செய்யப்பட்ட வழக்கில் முன்னேற்றம் உள்ளதாகவும், ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த போலீஸார், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும்’ என கோரினர். இதையடுத்து ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே போல் சினேகனும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நடிகை ஜெயலட்சுமி

இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், ’சினேகம் ஃபவுண் டேஷன்’ என்ற பெயரை ஜெயலட்சுமி‌ தான் தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாகவும், சினேகன் மீது பொய்யாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது. இதனையடுத்து சினேகன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார். மேலும், ஜெயலட்சுமிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, திருமங்கலம் போலீஸார் ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ‘சினேகம் ஃபவுண்டேஷன்’ குறித்தான ஆவணங்களை பெறுவதற்காகவும் வழக்கு குறித்து விசாரணை செய்வதற்காகவும் திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். மேலும் ’சினேகம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் பணம் வசூல் செய்ததற்கான ரசீது புத்தகங்களையும், ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றி, அதனடிப்படையில் ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக, போலீஸார் விசாரணைக்கு அழைத்த போது போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜெயலட்சுமி. பாஜக நிர்வாகி என்பதால் தன்னை திமுகவின் கைக்கூலியான காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் ஜெயலட்சுமியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் 13வது குற்றவியல் மேஜிஸ்ட்ரேட் சக்திவேல் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here