திருட்டு கும்பலைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஆடவர் கைது

கோத்தா கினாபாலு:

வீடு புகுந்து, திருடும் கும்பலைச் சேர்ந்தவன் என நம்பப்படும் ஒருவரை சபா காவல்துறை கைது செய்துள்ளது.

‘அகுட்’ என அழைக்கப்படும் 38 வயதுடைய சந்தேக நபர், நேற்று சாடோங் ஜெயாவின் ஜாலான் டெலிமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு 8.10 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்று, சபா குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால தலைவர், மூத்த துணை ஆணையர் அஸ்மி அப்துல் ரஹீம் கூறினார்.

சபா குற்றப் புலனாய்வுத் துறையின் உளவுத்துறை மற்றும் சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த திருட்டுப்பொருட்கள் என நம்பப்படும் கேமராக்கள், காலணிகள், கார் அலாரம், முகமூடிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் ஆடைகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலதிக விசாரணையில் சந்தேகநபரும் இன்னும் தலைமறைவாக இருக்கும் அவரின் மூன்று கூட்டாளிகளும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

“சந்தேக நபரும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டன,” என்று அஸ்மி கூறினார்.

“வீடு உடைத்து திருடியதற்காக குற்றவியல் சட்டத்தின் 457வது பிரிவின்படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here