வதந்தி பரப்பும் மோடி அரசுக்கு உணவு கொடுக்காதீர்கள்; விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர்

பொய்யான வதந்திகளைப் பரப்பும் பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும் என்று நடிகர் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்தி வருகின்றனர்.

ஆனால், அவர்கள் டெல்லி உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் எல்லையில் இரும்புத் தடுப்புகள், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களது வாகனங்கள் உள்ளே செல்ல முடியாதவாறு சாலைகளில் பள்ளம் பறிப்பது, வாகனங்களை பஞ்சராக்க ஆணிகளைப் பதிப்பது உள்ளிட்ட வேலைகளை காவல் துறை செய்து வருகிறது. டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்படுகிறது. அத்துடன் ரப்பர் குண்டுகளை வைத்து சுடவும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகர் கிஷோர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பதிவிட்டுள்ளார்.

அதில்,” நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா? குறைந்தபட்ச, அதிகபட்ச ஆதார விலை உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த பக்தர்களும், விவசாயிகள் விளைவித்த உணவைத் தின்று உயிரோடு இருக்கும் ஊடகங்களும் அதே விவசாயிகளை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்வது?

சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு. தினம் தினம் வார்த்தை மாறும். ஆனால், தேச விரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. முழு நாட்டிற்கும் உணவு வழங்கும் அண்ணா தாதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்.

ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய காவல் துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள். நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here