புத்ராஜெயா:
சட்டவிரோத குடியேறிகள் அல்லது விசா இல்லாது நாட்டில் அதிக காலம் தங்கியிருப்பவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும் திட்டம், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 2024 வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்தை (PRM) பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து ஆவணமற்ற வெளிநாட்டினரை கேட்டுக் கொள்வதாக குடிநுழைவு இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
“இருப்பினும், கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த திட்டத்தில் (PRM) பங்கேற்க தகுதியற்றவர்கள்” என்று அவர் கூறினார்.
300,000 முதல் 400,000 வரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் PRM திட்டத்தை மேற்கொள்வார்கள் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின்கீழ் நாடு திரும்பினால் RM500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
அதே வேளையில் பயணப் பத்திரங்கள் அல்லது விசா அனுமதிகளை மீறுபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு RM300 மட்டுமே வசூலிக்கப்படும்.
“எந்த ஆவணங்களும் இல்லாதவர்கள், தமது ஒருவழிப் பயண ஆவணங்களுக்காக அந்தந்த நாட்டுத் தூதரகத்தை அணுக வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சொந்த நாட்டுக்கு செல்லும் பயண ஆவணங்கள், விமான டிக்கெட் உட்பட தேவையான ஆவணங்களைப் பெற்று, அதன்பின் குடிநுழைவு அலுவலகத்தில் சரணடைந்தவுடன், அவர்கள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கூறினார்.
அவர்கள் (குடிநுழைவு) குற்றங்களுக்கானஅபராதத்தொகையைச் செலுத்திய பின்னரே, நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 18 வயதிற்குக் குறைவானவர்களுக்கு இந்தக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
அபராதம் செலுத்துவது தொடர்பாக, குடிநுழைவுத் துறை அல்லது உள்துறை அமைச்சகம் PRM ஐ செயல்படுத்த எந்த முகவர்களையும் நியமிக்கவில்லை என்றும், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் அல்லது டச் என் கோ இ-வாலட் போன்ற மின்னணு கட்டண முறைகள் மட்டுமே அபராதங்கள் ஏற்கப்படும் என்றும் ரஸ்லின் கூறினார்.





















