வீழ்ச்சியடையும் ரிங்கிட் மதிப்பு; ரமலான் மாசம் கடினமானதாக இருக்கலாம் என மக்கள் அச்சம்

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எண்ணி மக்கள் அணைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

நேற்று (பிப். 28) அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.77க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், எதிர்வரும் நோன்பு மாதத்தையும் நோன்புப் பெருநாளையும் கொண்டாடுவது தங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் என மலேசியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும். நாளை முதல் விற்பனை,சேவை வரியை 6 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக அரசு உயர்த்துவது, இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தம் குடும்ப உறுப்பினர்கள் ரமலான் மாதத்தில் பேரீச்சம்பழங்கள் விநியோகம் செய்வதைப் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சியால் அதை இவ்வாண்டு அதை நிறுத்தப் போகிறோம்,” என மலேசியாவில் ஆடை விற்பனைக் கடை ஒன்றை நடத்தி வரும் 46 வயதான சலேஹா சயிட் கூறினார்.

“நாங்கள் எப்பொழுதும் ஒரு லோரி நிறையப் பேரீச்சம்பழங்களை வாங்கி அதனைப் பள்ளிவாசல், ஆதரவற்றோர் இல்லம், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் விநியோகம் செய்வோம். ஆனால், இவ்வாண்டு அவர்களை எங்கள் வீட்டிற்கு நோன்பு துறத்தலுக்கு மட்டும் அழைக்கலாம் என எண்ணியுள்ளோம். இந்த ஆண்டு எங்களால் இதுதான் முடியும்,” என மிக வேதனையோடு அவர் தெரிவித்தார்.

மேலும் “ஐரோப்பா சுற்றுலா அழைத்துச் செல்வேன் என நான் என் பிள்ளைகளுக்கு அளித்த வாக்குறுதியை என்னால் இவ்வாண்டு நிறைவேற்ற முடியாது,” என மலேசியாவில் உள்ளூர் நிறுவனம் ஒன்றில் சந்தை நிறுவன மேலாளராகப் பணியாற்றும் 36 வயதான டேனியல் ஹாஷிம் கூறினார்.

“எங்கள் சேமிப்பு முழுவதையும் ஐரோப்பா சுற்றுலா செலவழிக்க முடியாது. மற்ற தேவைகளுக்கும் சேமிப்பு தேவை. மேலும்,எங்கள் வருமானத்தைத் தவிர மற்ற அனைத்தும் உயர்ந்துள்ளன. வரும் மார்ச் மாதம் நாங்கள் கூடுதல் விற்பனை, சேவை வரி செலுத்த வேண்டும்,” என வீழ்ச்சி அடைந்துவரும் ரிங்கிட் மதிப்பைச் சுட்டிக்காட்டி டேனியல் வருந்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here