750 சதுர அடி பரப்பளவில் புதிய PPR வீடமைப்பு திட்டம் அறிமுகமாகிறது

கோலாலம்பூர்:

நாட்டில் மிகக்குறைந்தது 750 சதுர அடி பரப்பளவு  கொண்ட PPR வீடமைப்புத் திட்டம் அறிமுகம் காணவுள்ளது என்று அந்நாட்டின் வீடமைப்பு மற்றும் உள்நாட்டு அரசாங்க அமைச்சர் கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

PPR திட்டத்தின்கீழ் வரும் வீடுகள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, நிலைத்தன்மையுடன் கூடிய வாழத் தகுந்தவையாக இருக்கும் என்று மிங் குறிப்பிட்டார்.

மேலும், அந்த வீடமைப்புத் திட்டத்தில் வணிக வசதிகள், பசுமையான இடங்கள், சமூக நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.

PPR திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளின் விலை 300,000 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. இருப்பினும், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற நோக்கில், 60,000 ரிங்கிட் என்ற மலிவான விலையில் அந்த வீடுகள் விற்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த 60,000 ரிங்கிட்டிலும் கிட்டத்தட்ட 15,000 ரிங்கிட், வீட்டுப் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

“PPR வீடுகளை பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் விற்க முடியும். பொது வீடமைப்புத் திட்டங்களை சிலர் தவறாகப் பயன்படுத்தக்கூடும். இந்தத் திட்டத்திற்கு அதிகமான மானியம் வழங்கப்படவுள்ளதால் இந்தக் கட்டுப்பாடு,” என்று அமைச்சர் மிங் தெரிவித்தார்.

PPR திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளின் குறைந்தது 750 சதுர அடி பரப்பளவுடன் இருக்கும். அதில் இரண்டு குளியலறைகளும் மூன்று அறைகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வீடுகளுக்கு அருகே பெரிய அளவிலான போக்குவரத்துத் திட்டம் இடம்பெறும். அதனால் பிஆர்ஆர் குடியிருப்பு வளாகங்களில் குறைந்த அளவிலான வாகன நிறுத்தும் இடமே இருக்கும் என்றார் மிங்.

மேலும், அவை பசுமைசார்ந்த கட்டடங்கள் என்பதால் மின்சாரம் போன்ற கட்டணங்கள் 30 விழுக்காடு வரை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், PPR வீடுகள் சராசரியாக 70 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும் தரத்துடன் கட்டப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here