கிள்ளான் தெங்கு கிளானா பகுதியில் வாகன நிறுத்தத் தடங்களை அதிகரிப்பீர்; மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை

கிள்ளான்:

இங்குள்ள தெங்கு கிளானா லிட்டல் இந்தியா வளாகத்தில் பல்வேறு அலுவல்கள் காரணமாக பொதுமக்கள் நிறுத்திச் செல்லும் வாகனங்களை சட்ட விரோத நிறுத்தம் என்ற வகையில், எம்டிபிகே எனப்படும் கிள்ளான் அரச மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் இழுவை வண்டியை வைத்து இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் அன்றாடக் காட்சியாக இருந்து வருவது கவலையளிப்பதாக இங்குள்ள பொதுமக்கள் உள்ளிட்ட வணிகர்களும் அலுவலக நடத்துனர்களும் தினசரி வாடிக்கையாளர்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிகாலையில் அங்குள்ள வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் வணிகர்கள் பரபரப்புடன் வாகனத்தை நிறுத்தி விட்டு வங்கிக்குள் நுழைந்து விடுகின்றனர். அதன் தறுவாயில் வெளியே சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட காரை அமலாக்க அதிகாரிகள் இழுத்துச் செல்லத் தயாராவதும் அதையறிந்து பதறியடித்து வெளியே ஓடி வருவதற்குள் அமலாக்க அதிகாரிகள் காரை இழுத்துச் செல்வதும் இங்கு வாடிக்கையாக நடக்கும் சம்பவங்களாகும்.

இது போன்ற சம்பவம் ஒன்றை அண்மையில் நேரில் பார்த்து வருத்தமடைந்ததாக அவ்வட்டாரத்தில் வழக்குறைஞர் அலுவலகத்தை நடத்தி வரும் வழக்கறிஞர் முருகவேலு சுப்பிரமணியம் மக்கள் ஓசையிடம் கூறினார்.

சம்பந்தப்பட்ட வணிகரிடம் அச்சம்பவம் குறித்து விவரம் கேட்டபோது, தனது வர்த்தக வருமானமான பெருமளவு ரொக்கப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வந்ததாகவும் சுற்றுமுற்றும் எல்லா வாகன நிறத்துமிடங்களிலும் வாகனங்கள் நிரம்பி விட்டதால் வேறு வழியில்லாமல் சாலையோரம் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகமான ரொக்கப் பணத்தை வைத்துக் கொண்டு வெகு தூரமுள்ள செட்டித் திடல் அருகிலோ இரயில் நிலையத்தின் அருகிலோ வாகனத்தை நிறுத்தி வைத்து பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வங்கிக்கு ரொக்கப் பணத்துடன் நடந்து வருவது அவ்வளவு பாதுகாப்பானதாகவும் இருக்காது என்ற மற்றொரு காரணத்தையும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்துரைத்த முருகவேலு இவ்வளாகத்தில் இருக்கும் மூன்று முக்கிய வங்கிகள் உட்பட ஓர் அஞ்சலகம், மூன்றுக்கும் மேற்பட்ட மருந்தகங்கள், பலதரப்பட்ட வணிகக் கடைகள், உணவகங்கள் எனப் பல்வேறு அலுவல்கள் காரணமாக இங்குப் படையெடுக்கும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தப் போதுமான வசதி இல்லை. இதற்குத் தீர்வு காண மாநகர் மன்றம் இதுவரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

நகர மத்தியில் வாகன நிறுத்தமிடப் பற்றாக்குறையே இங்கு வரும் மக்களின் தலையாயப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு முக்கிய கவனம் செலுத்தாமல் சுற்றுப் புறங்களைப் பல வர்ணங்களடித்து அலங்கார வரைபடங்கள் அமைத்து என்ன பயன்? என்று வினவிய அவர், தற்போது அரச மாநகர் அந்தஸ்துடன் விளங்கும் கிள்ளான் பட்டணத்தை மேம்படுத்தும் நடவடிக்கைக்காக மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ள 80 மில்லியன் வெள்ளியில் நகரத்தில் வாகன நிறுத்தத் தடங்களை மேலும் அதிகரிக்கும் திட்டத்தை மாநகர் மன்றம் செயல்படுத்த முன் வர வேண்டும், என்று ஷா அலாம் மாநகர் மன்ற முன்னாள் உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் இங்குள்ள ஆர்எச்பி வங்கிக்கு எதிர்புறமுள்ள விசாலமான இடத்திலுள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து அங்கு சிறிய மேடையரங்கு ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அங்காவது கூடுதல் வாகன நிறுத்துமிடத்தை அமைத்திருக்கலாமே. இதனை விடுத்து நாளும் பொழுதும் மாநகர் மன்ற இழுவை வண்டி தெங்கு கிளானாவை மட்டுமே சுற்றிச் சுற்றி வட்டமிடுவதைத்தான் தான் காண முடிகிறது, என்று மற்றொரு சமூக சேவையாளரான இரவீந்திரன் பெரியசாமி சுட்டிக் காட்டினார்.

இந்த இடத்தை விட்டால் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் போலிருக்கிறது. ஏனெனில், கிள்ளான் நகர மத்தியில் இங்குதான் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறைப் பிரச்சினை அதிகமாக நிலவுகிறது. அதன் காரணமாகவே வாகனமோட்டிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.

தொடர்ந்து இது சட்ட விரோதம் எனக் கூறி வாகனங்களை இழுத்துச் செல்கின்றனர். இந்நடவடிக்கைகளால் மாநகர் மன்றத்திற்கு நல்ல வருமானம் வசூலாகிறது. இதன் காரணமாகத்தான் நாள்தோறும் இழுவை வண்டித் தரப்பினரின் முழுக் கவனமும் இங்கேயே செலுத்தப்படுகிறதா, என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருவதாக பண்டார் புத்ரி டா மா சாய் நிறுவன நான்கு இலக்க லாட்டரி ஏஜெண்டான பெரிச்சியப்பன் கூறினார்.

வாகனமும் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் 400.00 வெள்ளி அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு மாநகர் மன்ற அலுவலகத்திற்கும் பின் தெப்பி சுங்கை பகுதியில் 3 கிலோ மீட்டர் தொவில் செயல்படும் வாகன மீட்புக் கிடங்கிற்கும் செல்ல வேண்டிய நிலைமை அவர்களுக்குப் பெரும் மன உளைச்சலையும் தடுமாற்றத்தையும் தேவையற்ற பணச் சுமையையும் ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நகர மத்தியில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் என்ற கருத்து நியாயமானதுதான். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஜாலான் தெங்கு கிளானா, ஜாலான் டத்தோ ஹம்சா ஆகிய சாலைகளின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பல இடங்களில் அவ்வசதிகள் நீக்கப்பட்டு விட்டதன் உள்நோக்கம்தான் என்ன? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இதன் தொடர்பில் பொதுமக்கள் படும் அவஸ்தைக்கும் மன உளைச்சலுக்கும் தீர்வு காணும் வகையில் இவ்வட்டார சட்டமன்ற உறுப்பினரும் கவின்சிலரும் இப்பிரச்சினையை மாநகர் மன்ற மேல் மட்ட அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு சென்று தேவையான மாற்றுத் திட்டங்களை ஏற்படுத்த வழி காண வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here