வேண்டுமென்றே சாலை விபத்துகளை ஏற்படுத்தி, வாகனமோட்டிகளிடம் பணம் பறித்த ஆடவருக்கு 11 மாத சிறை

ஜார்ஜ் டவுன்:

வேண்டுமென்றே சாலை விபத்துகளை ஏற்படுத்தி, பின்னர் விபத்தில் சம்மந்தப்பட்ட வாகனமோட்டிகளை மிரட்டி பணம் பறித்த மலேசிய ஆடவருக்கு 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஷ்ரஃப் அப்துல் சுகூர், 41, என்ற அந்த ஆடவர் தன்மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் சித்தி நூருல் சுஹைலா பஹாரின் இந்த தண்டனையை வழங்கினார்.

முதல் குற்றச்சாட்டின்படி, அஷ்ரஃப் ஒரு பெண்ணை ‘பணம் தராவிட்டால் நடப்பது வேறு’ என்று அச்சுறுத்தி, 50 ரிங்கிட் பறித்தார். இரண்டாவது குற்றச்சாட்டும் அத்தககையதுதான். இம்முறை அவர் 30 ரிங்கிட் பறித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 15 – 30 தேதிகளுக்குள் ஜெலுத்தோங்கின் ஜாலாங் தெம்பாகாவில் அவர் இக்குற்றங்களைப் புரிந்தார்.

முதல் குற்றத்திற்கு 11 மாதங்களும் இரண்டாவது குற்றத்திற்கு 10 மாதங்களும் இவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் 10ஆம் தேதி இவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இரண்டு தண்டனைகளையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தான் வேலையின்றி இருந்ததாலும் வயதான பெற்றோரைப் பேண வேண்டி இருந்ததாலும் தனக்குக் குறைந்தபட்ச தண்டனை விதிக்கும்படி நீதிபதியிடம் அஷ்ரஃப் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, அஷ்ரஃப் வேண்டுமென்றே விபத்து விளைவித்து, இழப்பீடாகப் பணம் தரும்படி கேட்ட வகையில், அவரது படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here