விஜய் ஆண்டனி மன்னிப்புக் கேட்க வேண்டும்; தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகள் கண்டனம்

இயேசு மது குடித்தார் எனப் பொதுவெளியில் பேசி கிறிஸ்துவர்களின் மனதை நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி புண்படுத்தியுள்ளார் என தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் ‘ரோமியோ’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் நடந்தது. படத்தில் முதலிரவில் நாயகி மது அருந்துவது போல வெளியாகி இருந்த போஸ்டர் பற்றி விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு விஜய் ஆண்டனி, “குடிப்பது தவறுதான். ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான். நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்” எனப் பேசினார். விஜய் ஆண்டனி பேச்சு இணையத்தில் சலசலப்பைக் கிளப்பிய நிலையில், இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எந்த ஆதாரம் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துவுடன் ஒப்பிட்டு, ‘இயேசு கிறிஸ்து மது குடித்தார்’ என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here