பாப்பார்:
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பாப்பார் மாவட்டத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஏழு மில்லியன் லிட்டர் (LPD) சுத்தமான நீர் வழங்கப்பட வேண்டும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறினார்.
நேற்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோக செயல்முறை மூலம் 1.18 மில்லியன் லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, இது மாவட்ட மக்களின் தேவைகளை விட மிகக் குறைவு என்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சராகவும் இருக்கும் அர்மிசான் சொன்னார்.
“நாங்கள் பிப்ரவரி 23 அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை வழங்கத் தொடங்கினோம், மார்ச் 13 அன்று வறட்சி பேரழிவு நிலை அறிவிக்கப்பட்டவுடன், லோரிகள் மற்றும் பல நீர்விநியோக வாகனங்களைப் பயன்படுத்தி இந்த நீர் விநியோகத்தின் திறனை அதிகரித்தோம். மேலும் பேரழிவு நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் சுமார் 6 இலட்சம் லிட்டர் நீரை வழங்கினோம்” என்றார்.
கடந்த புதன்கிழமை, பாப்பர் மாவட்ட பேரிடர் மேலாண்மை திணைக்களம், கோத்தா கினாபாலுவிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாப்பார் மாவட்டத்தை, வெப்பமான காலநிலையால் ஏற்பட்ட நீர் விநியோக நெருக்கடி காரணமாக வறட்சிப் பேரிடர் பகுதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

![papar]](https://makkalosai.com.my/wp-content/uploads/2024/03/papar-696x473.jpg)



















