கேகே சூப்பர் மார்ட் சம்பந்தப்பட்ட காலுறை விவகாரத்தில் சமய உணர்வை தூண்டும் வகையில் பேசிய ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், வியாழக்கிழமை (மார்ச் 21) ஒரு அறிக்கையில் 35 வயதான முகநூல் பயனாளர் புதன்கிழமை (மார்ச் 20) கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் என்ற வார்த்தையுடன் காலுறைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார். போலீசார் சமூக ஊடக பயனர்களாக பொறுப்பாக இருக்குமாறும் பொது நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதிக்கும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது.









