ஜார்க்கண்டில் அவசர மருத்துவ உதவி விமான விபத்து; எழுவர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம், நேற்று (பிப்ரவரி 23, 2026) மாலை விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தனர்.

பீச்கிராஃப்ட் C90 (Beechcraft C90 – VT-AJV) என்ற விமானம் ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையிலிருந்து டெல்லிக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை அழைத்துச் சென்றது.

மாலை 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது, பின்னர் மாலை 7:34 மணிக்கு கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடன் (ATC) விமானி கடைசியாகத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மோசமான வானிலை காரணமாக பாதையை மாற்ற அனுமதி கேட்டுள்ளார்.

அனுமதி கேட்ட சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. சுமார் 20-25 நிமிட பயணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் விவரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
1. சஞ்சய் குமார் (நோயாளி – 65% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தவர்)
2. கேப்டன் விவேக் விகாஸ் பகத் (விமானி)
3. கேப்டன் சவ்ராஜ்தீப் சிங் (துணை விமானி)
4. டாக்டர் விகாஸ் குமார் குப்தா (மருத்துவர்)
5. சச்சின் குமார் மிஸ்ரா (துணை மருத்துவ பணியாளர்)
6. அர்ச்சனா தேவி (உதவியாளர்/உறவினர்)
7. துரு குமார் (உதவியாளர்/உறவினர்)

முதற்கட்ட தகவல்களின்படி, அந்தப் பகுதியில் நிலவிய கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.

அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் நிலவின. இருப்பினும், இன்று காலைக்குள் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here