இலங்கையில் மீண்டும் ஓங்கும் சீனாவின் கை! உதவி என்கிற பெயரில் வளங்களை முழுசாக விழுங்க முயற்சி

கொழும்பு: மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ சீனா முன்வந்திருக்கிறது. இதன் மூலம் கொழும்பு விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா மேம்படுத்த நிதி வழங்கும். கடந்த ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த ஆசிய நாடுகளுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர் போராட்டங்கள், எரிபொருள், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, கடுமையான விலைவாசி ஆகியவை இலங்கையை புரட்டி போட்டியிருந்தது. தற்போது இலங்கை தனது நிலையிலிருந்து மெல்ல மீள தொடங்கியுள்ளது.

இருப்பினும் ஐஎம்எஃப் கொடுத்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் இலங்கை திணறி வருகிறது. முன்பு இருந்ததை காட்டிலும் இப்போது ஓரளவு பொருளாதாரம் வளர்ந்திருந்தாலும், கடனை திரும்ப செலுத்தும் அளவுக்கு இந்த வளர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் இலங்கைக்கு உதவ சீனா முன்வந்திருக்கிறது.

அதன்படி கொழும்பு விமான நிலையத்தையும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மேம்படுத்த சீனா நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். சீனா இது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், தான் வழங்கிய கடனை வசூலிக்க கூடுதல் கால அவகாசத்தை சீனா வழங்கியுள்ளதாக இலங்கை தெரிவித்திருக்கிறது. தற்போது சுமார் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடனை இலங்கை திருப்பி செலுத்த வேண்டும்.

ஆனால், போதுமான நிதி இல்லாத காரணத்தினால் இது குறித்து சீனாவிடம் கடன் கேட்டிருந்தது. தற்போது இதற்கு சீன பிரதமர் லீ கியாங் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த 2017ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துவிட்டது. இனி 99 ஆண்டுகளுக்கு இந்த துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மட்டுமல்லாது இந்த துறைமுகத்தில் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும் சீனாவின் உளவு கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் கொழும்பு விமான நிலையமும் சீன கட்டுப்பாட்டுக்குள் சென்றால் இந்தியாவுக்கு இது பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here