மதிக்கத் தெரியாத மாண்புமிகு அமைச்சர்

பி.ஆர்.ராஜன்

மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் ஆகியோருடன் ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டஹாங் அண்மையில் நடத்திய ஒரு சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டனர்.

ஆனால், அமைச்சரோ இந்த மக்கள் பிரதிநிதிகளை மதிக்கத் தெரியாதவராக நடந்துகொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது என்று ம.இ.கா. தேசியக் கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உண்மையிலேயே மித்ரா விவகாரத்தில்  எனக்கு  விருப்பமும் இல்லை, ஈடுபாடும் இல்லை. எனது அமைச்சின் கீழ் வைத்துவிட்டார்கள். எனக்கு வேறுவழியும் தெரியவில்லை என்று பேசியது இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறான சிந்தனையைக் கொண்ட ஒருவரையா இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்தும் பொறுப்புக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமனம் செய்திருக்கிறார் என்ற கேள்வி ஆர்ப்பரிக்கிறது.

அதுமட்டுமன்றி அவரின் பேச்சு மரியாதைக் குறைவாக இருந்தது. அவரது பதில்கள் அனைத்தும் வேண்டாவெறுப்பாகவும் ஒப்புக்குச் சப்பாணியாகவும் இருந்தது.

2024 பிறந்து  மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.  இவர்கள் எப்போது இந்திய மக்கள் நலத் திட்டங்களை மதிப்பீடு செய்து அமல்படுத்தப் போகிறார்கள்?

வரும் அக்டோபருக்குள் இதனைச் செய்து முடிக்காவிட்டால் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் (10 கோடி) ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும்.

இந்த நிலையில் ‘பெமாண்டு’ என்ற ஒரு தனியார் ஆலோசனை நிறுவனத்தை ஒற்றுமைத்துறை அமைச்சு மித்ராவுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இது டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் அரசாங்க ஏஜென்சியாக இருந்தது.  இப்போது தனியார் நிறுவனமாகி விட்டது.

பெமாண்டுவைக் கொண்டுதான் புதிய ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கின்றன. இது ஏன் என்பது இன்றளவும்  புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாக ம.இ.கா., ஒய்எஸ்எஸ் ஆகியவை நாடு முழுவதும் கலந்துரையாடல்களை நடத்தி இந்தச் சந்திப்புகளிலிருந்து திரட்டப்பட்ட கருத்துகளையும் பரிந்துரைகளையும் அறிக்கைகளாகத் தயாரித்து  முறையாக ஆவணப்படுத்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கைகள் எல்லாம் இப்போது எங்கே போயின? குப்பைத் தொட்டிகளில்  வீசப்பட்டதா என்று நெல்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது நியாயமான – சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி.

இந்த பல கட்டங்களாக ஆய்வுகளை நடத்தியபோது, பல்வேறு தரப்பினர் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர். ஆண்டுக் கணக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ம.இ.கா. அனைத்து இந்தியர் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை மன்றம் அமைத்து நாடு முழுவதும்  கலந்துரையாடல்களை நடத்தி, கருத்துகளையும் பரிந்துரைகளையும் திரட்டி, ஆய்வறிக்கையாக ஆவணப்படுத்தி அரசாங்கதிடம் சமர்ப்பித்தது.

இந்த ஆய்வு ஆவணங்கள் எதையும்  இவர்கள் பார்க்கவே இல்லையா? இப்போது பெமாண்டு என்ற ஒரு தனியார் நிறுவனத்தை அமர்த்தி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலான தொகையை வழங்கி ஆய்வுப் பணியை நடத்தியிருக்கிறது.

இரண்டே நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்  புதிதாக எதையும் கண்டுபிடித்தார்களா? பெமாண்டுவுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்பந்தம்? யார் யார் இதில் கலந்துகொண்டார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இப்படி கேள்வி கேட்டது அமைச்சருக்கு அறவே பிடிக்கவில்லை. அதில் அவருக்கு உடன்பாடும் இல்லை.  வேண்டாவெறுப்பாக பதில் அளித்தார். சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சரின் போக்கு அதிர்ச்சியை அளித்தது.

மித்ரா சிறப்புப் பணிக்குழு இன்னமும் இருக்கிறதா? பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப. பிரபாகரன் அதன் தலைவராக இன்னும் இருக்கிறாரா? அதன் செயற்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா? அல்லது சிறப்புப் பணிக்குழு கலைக்கப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,  நீங்கள் சொல்வதுதான் நிஜம். மித்ரா சிறப்புப் பணிக்குழு கலைக்கப்பட்டுவிட்டது. பிரபாகரன்தான் தலைவராக இருக்கிறார். பெமாண்டுவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். வெளியாரும் அதில் இடம் பெற்றிருப்பர் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், தமக்கு என்ன பொறுப்பு என்பது பிரபாகரனுக்கு இன்றளவும் தெரியாமலும் புரியாமலும் இருப்பதுதான் காலக்கொடுமை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உத்தரவு வருகிறது. கேள்வி கேட்டால், அமைச்சர் பதில் சொல்லாமலேயே ஓடி விடுகிறார்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். என். ராயர் முன் வைத்த ஒரு கேள்விக்கு  பதில் அளிக்காமல் நீங்கள் உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு விருட்டென அமைச்சர் வெளியேறிவிட்டார்.

இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்திய சமுதாய மக்களுக்கும்  இவ்வளவுதான் மரியாதையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here