“எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?” பாஜக நிர்வாகிக்கு ஆவேசமாக பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி

 சிதம்பரம்: மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராம சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது திமுகவை மட்டுமல்லாமல் முன்பு தங்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் ராம சீனிவாசன். இந்நிலையில், ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜகவை அதிமுக தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராம சீனிவாசன் பதில் அளித்தார்.

அதிமுகவை கடுமையாக தாக்கிய பாஜக வேட்பாளர்: ராம சீனிவாசன் பேசுகையில், “ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள எஃகு கோட்டை அதிமுக என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக என்றைக்கு ஒன்றரை கோடி ஓட்டு வாங்கி இருக்கிறது? ஜெயலலிதா இருக்கும் போது இருந்த அதிமுகவை பற்றி பேசவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? ஜெயலலிதா கூட்டணியே வேண்டாம் என்று சொல்லி தனித்துப் போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமியால் அப்படி தனித்து போட்டி போட முடிந்ததா?

ஜெயலலிதாவுக்கு இருந்த அரசியல் ஆளுமை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? அண்ணா திமுக என்ற கட்சியே இந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இருக்காது. ஏனென்றால் செல்வாக்கை அந்தக் கட்சி இழந்துவிட்டது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்படும். இவ்வளவு பெரிய சரிவை சந்தித்த பிறகும், அதிமுகவை கட்டி காப்பாற்ற எடப்பாடி ஒன்றும் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி அப்படிப்பட்ட ஆளுமையான தலைவர் இல்லை” எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி பதிலடி: இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மதுரையில் பாஜக பொதுச் செயலாளர் பேசி இருக்கிறார். மதுரை பாஜக வேட்பாளராக இருக்கும் ராம சீனிவாசன் பேசி உள்ளார். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.

இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.

தாமரை சின்னத்தை அடையாளம் காட்டியதே அதிமுக தான்:அதிமுக இருக்காது என்று சொல்கிறார். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். 1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?” என ஆவேசமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here