தோக்கியோ:
ஏப்ரல் 1 முதல் தனியார் வாடகைக் கார் சேவைகள் மீதான சில தடைகளை ஜப்பான் நீக்கியுள்ளது.
தோக்கியோ, கியோட்டோ உள்ளிட்ட நான்கு இடங்களில் தனியார் வாடகைக் கார் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் டாக்சி ஓட்டுநர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தத் தடைகள் நீக்கப்பட்டன.
மே மாதம் முதல், ‘சப்போரோ’, ‘ஒசாகா’, செண்டாய்’, ‘சாய்தாமா’ உள்ளிட்ட நகரங்களின் சில பகுதிகளிலும் வாடகைக் கார் சேவைகள் வழங்கப்படும் என்று ஜப்பானிய நாளேடான ‘தி மைனிச்சி ஷிம்புன்’ தெரிவித்தது.
தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் அதிகாரபூர்வமற்ற டாக்சி ஓட்டுநர்களாகச் செயல்படுவதை அனுமதிக்கும் சேவைகளை ஜப்பான் நீண்டகாலமாகத் தடைசெய்துள்ளது.
இருப்பினும், சுற்றுப்பயண இடங்களிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் டாக்சிகள் பற்றாக்குறை இருப்பதால், தனியார் வாடகைக் கார் சேவையை விரிவுபடுத்த, ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் முன்னாள் பிரதமர் யோஷிஹிடெ சுகாவும் அண்மையில் கேட்டுக்கொண்டனர்.
அதனை அடுத்து தற்போது சில தடைகள் நீக்கப்படும். உள்ளூர் டாக்சி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொந்த தனியார் வாகனங்களைக் கொண்ட ஓட்டுநர்கள், குறிப்பிட்ட நாள்களிலும் நேரங்களிலும் டாக்சி சேவைகளை வழங்க அனுமதி கொடுக்கப்படுகிறது.