சிவசங்கரியின் வெற்றி  ஒலிம்பிக் போட்டிக்கு உந்துதல் – நிக்கோல் டேவிட்

லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில் தேசிய விளையாட்டாளர் எஸ். சிவசங்கரி வாகை சூடியது 2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்த விளையாட்டுப் பிரிவில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை மிளிரச் செய்திருப்பதாக மலேசிய ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் டத்தோ நிக்கோல் டேவிட் கருத்தரைத்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் சிவசங்கரி 3-2 என்ற வெற்றிக்கணக்கில் உலகத் தர வரிசையில் 2ஆம் இடத்தில் ஹனியா எல் ஹமியைத் தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் சுமார் 81 நிமிடங்களுக்கு நீடித்தது.  இந்நிலையில் சிவசங்கரி வெளிக்காட்டிய சிறந்த விளையாட்டுத் திறனானது ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும்.

அது மட்டுமன்றி அவர் இந்த ஒரே போட்டியில் உலகின் முதலாம், இரண்டாம் நிலை விளையாட்டாளர்களைத் தோற்கடித்துள்ளார். இறுதி ஆட்டம் வரை அவர் தனது நிலைத்தன்மையைத்  தொடர்ந்தார். அதனை என்னால் உணர முடிந்தது. அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

வருங்காலத்தில் அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க நான் வாழ்த்துகளைக் கூறுகிறேன். மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதிபெற இருக்கின்ற நேரத்தை சிவசங்கரி முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். அதுபோல் சிவசங்கரிக்கும் இந்த எண்ணம் உள்ளது. அவருக்கு இன்னும் 4 ஆண்டுகால அவகாசம் இருக்கிறது. நாம் சிவசங்கரிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று நிக்கோல் டேவிட் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here