உசிலம்பட்டி: குக்கர் மாதிரிதானே அவருடைய (டிடிவி தினகரன்) முகமும் குண்டா இருக்கு; அவரை பார்க்கும்போது அந்த சின்னம் ஞாபகம் வரவேண்டும் என தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனின் மனைவி கலகலப்பாக பேசி ஓட்டு சேகரித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் அனுராதா பேசியதாவது:
குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குக்கர் மாதிரிதானே அவருடைய (டிடிவி தினகரன்) முகமும் குண்டா இருக்கு; அவரை பார்க்கும்போது அந்த சின்னம் ஞாபகம் வரவேண்டும். குக்கர் சின்னத்தில் நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றுவதற்கான ஓட்டு; தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு இவ்வாறு பேசி ஓட்டு சேகரித்தார்.