கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் நடந்த இரு தனித்தனி நடவடிக்கைகளில், உள்ளூர் நபர் ஒருவரை கைது செய்து, சியாபு (methamphetamine) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் RM974,000 ஆகும்.
29 வயதான சந்தேக நபர் KL தெற்கு பகுதியில் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பின் லாபியில் வைத்து இன்று மாலை 6.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.
ஆரம்பகட்ட சோதனையில், போலீசார் 741.5 கிராம் எடையுடைய ஹெராயின் அடிப்படையிலான இரண்டு பதப்படுத்தப்பட்ட கட்டிகள் அடங்கிய பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்தனர்.
தொடர் விசாரணையின் பேரில், செராஸ் தாமான் சேகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேக நபரின் டொயோட்டா வியோஸ் கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. காருக்குள், சீன தேநீர் பாக்கெட் வடிவில் 20.5 கிலோ மெத்தாம்பேட்டமைன், மேலும் 3 கிலோ எடையுடைய எட்டு பதப்படுத்தப்பட்ட ஹெரோயின் அடிப்படைகள் அடங்கிய பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக 23.74 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பிடப்பட்ட பெறுமதி பு RM974,000 ஆகும் என்றும், இது சுமார் 420,400 தனிப்பட்ட டோஸ்களாக பயன்படுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.
மேலும், இந்தக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வந்ததோடு, போதைப்பொருட்களை சேமிப்பதற்காக வாகனங்களைப் பயன்படுத்தி, பின்னர் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு முன்னர் குற்றவியல் சட்டம் பிரிவு 420 (மோசடி) சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்காக போலீஸ் பதிவுகளில் இருந்ததாகவும் ஃபாடில் தெரிவித்தார்.
இந்நிலையில், 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஆகஸ்ட் 27 வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.




















