நள்ளிரவில் 300 ஏவுகணைகள், டிரோன்களை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல்

ஜெருசலேம்:

சிரியாவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை குறிவைத்து நள்ளிரவில் 300 ஏவுகணை, டிரோன்களை ஏவி ஈரான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், இஸ்ரேல் பக்கம் நிற்பதாக கூறியிருப்பதால் 3ம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 1,200 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர். இதற்கு பழிக்கு பழியாக காசாவில் வான்வழி, தரைவழி, கடல் மார்க்கம் என நாலாபுறமும் சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவம், கடந்த 6 மாதமாக போரிட்டு வருகிறது.

இதில் காசா முற்றிலும் உருக்குலைந்து, 33,000 மக்கள் பலியாகி உள்ளனர். ஹமாஸ் மீதான போரை கண்டித்துள்ள ஈரான் தனது ஆதரவு படைகளான ஹிஸ்புல்லா மூலமாக லெபனானிலும், ஹவுதி மூலம் ஏமன் வளைகுடா பகுதியிலும் இஸ்ரேலுக்கு குடைச்சல் தந்தது.

இதற்கிடையே, கடந்த 1ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானின் முக்கிய கமாண்டர் ஒருவர் உட்பட தூதரக அதிகாரிகள் 12 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியது. ஆனால் இஸ்ரேல் தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இதற்கு கடுமையான பதிலடி தருவோம் என ஈரான் எச்சரித்திருந்தது.

இதனால் 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்திருந்தார். அதே போல, நேற்று முன்தினம் நள்ளிரவில் இஸ்ரேலை குறிவைத்து ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஈரானில் இருந்து சுமார் 300 ஏவுகணைகள், டிரோன்கள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலின் பல இடங்களிலும் பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தபடி இருந்தனர். ஈரான் ஏவிய ஏவுகணை, டிரோன்கள் அனைத்தையும் இஸ்ரேல் தனது ஏவுகணை தடுப்பு அமைப்புகள் கொண்டு தகர்த்ததாக கூறி உள்ளது. இஸ்ரேல் விமானப்படையும் ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தியது. இதில் அமெரிக்க படைகளும் இணைந்து இஸ்ரேலுக்கு உதவின. இது இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதல். ஈரான் ஏவிய 99 சதவீத ஏவுகணை, டிரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவ ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறி உள்ளார்.

ஈரான் 170 டிரோன்களையும், 30க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணையும், 120 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவியதாக டேனியல் கூறி உள்ளார். இவற்றில் பல ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்தாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், சிறுமி உட்பட 7 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, போர்க்கால அமைச்சரவையை கூட்டி விவாதித்துள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளும் ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக கூறி உள்ளன.

அமெரிக்க அதிபர் பைடன் ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகளை கொண்டு வருவதை பைடன் நோக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் மேற்கொண்டு தாக்குதல் நடத்தாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், ஒருவேளை ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இது 3ம் உலகப் போராகவும் விஸ்வரூபம் எடுப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here