அம்பேத்கரை பின்பற்றுவாரா பிரதமர் அன்வார்?

பி.ஆர். ராஜன்

இனப் பாகுபாடு, ஜாதிய அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடிய  ஓர் உண்மையான போராளி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் டாக்டர் அம்பேத்கர். அம்பேத்கரின் தத்துவங்களும் சிந்தனைகளும் அபாரமானவை.  மனித குலத்திற்கு மிகவும் அவசியமானவை.  ஒரு வழக்கறிஞராகவும் பொருளாதார நிபுணராகவும் இந்தியாவிற்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று அவர் புகழ்ந்துரைத்தார்.

ஷாஆலமிலுள்ள ஐடிசிசி மண்டபத்தில் ஏப்ரல் 14-15 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் மாநாட்டில் 2ஆவது நாளில் தலைமையேற்று மலேசியப் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில்  மலேசிய அரசாங்கம் இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு  வழங்கிவரும்  நிதி உதவிகளானது மடானி அரசாங்கம் எவ்வாறு அனைத்து இனங்களையும் பாரபட்சமின்றி கவனித்துக்கொள்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்தை தாம் அலட்சியப்படுத்தினால் தம்மை அந்த சமுதாயம் தண்டிக்கலாம் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவர் குறிப்பிட்டார்.

அம்பேத்கரின் இனப் பாகுபாடு, ஜாதிய  அட்டூழியங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி  குறிப்பிட்ட அன்வார், இந்த நாட்டில் மலேசிய இந்தியர்களுக்கு  இழைக்கப்படும்  அட்டூழியங்களையும் அவலங்களையும்  தடுக்க  முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? யார் அவரைத் தடுப்பது?

இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உயிரையும் ரத்தத்தையும் தியாகம் செய்த ஓர் இனம் என்றால் அது இந்தியர்களாக மட்டுமே இருக்க முடியும். அந்த இனத்தின் மொழி, சமயம்,  தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் தொடர்ந்து காயப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தடுப்பதற்கு அன்வார் இதுவரை என்ன செய்திருக்கிறார்? இந்துவாகப் பிறந்து இடையில் மதம் மாறிய ஸம்ரி வினோத் பொழுது சாய்ந்து பொழுது விடியும் வரை ஒவ்வொரு நாளும் இந்து சமயத்தையும்  அவர்களின் சமய நம்பிக்கையையும் அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் இழிவுபடுத்தி வருகிறார்.

இவருக்கு எதிராக பல நூறு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு தனி நபருக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்கு என்ன காரணம்?

மலேசியர்கள் அனைவருக்குமான பிரதமர் என்று தம்மைத் தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அன்வார் இந்த விவகாரத்தில் வாய்மூடி மௌனியாக இருப்பது இந்திய சமுதாயத்தைக் குறிப்பாக இந்துக்களை அவர் கைவிட்டு விட்டாரா என்று கேள்வி கேட்க வைக்கிறது.

அம்பேத்கர் அனைத்துலக மாநாட்டை அதிகாரப்பூர்வமாக அன்வார் தொடக்கி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்திய நாட்டின் தேசிய மேம்பாட்டின் அடையாளச் சின்னமாக அம்பேத்கர் விளங்குகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இதனை தம்முடைய அரசியல் விளம்பரத்திற்காக அன்வார் செய்திருந்தால்  அதனை நிச்சயமாக இந்திய சமுதாயம் ஜீரணித்துக்கொள்ளாது.

இனம், சமயம், மொழி, நிறம் என்று யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவருக்குமான ஒரு பிரதமர் தாம் என்று அன்வார் சொல்வதில் உண்மை இருக்குமாயின் ஸம்ரி வினோத் இனி இந்துக்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது, விமர்சிப்பது கூடாது. இத்துடன் அவரது வாய் அடைக்கப்படவேண்டும்.

மலேசிய இந்தியர்கள் குறிப்பாக, இந்துக்கள் மீதான அக்கறை உண்மையென்றால் இந்தப் பிரச்சினைக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக ஒரு தீர்வு காண்பாரா?

நிறைய ஏமாற்றங்களைச் சுமந்துகொண்டிருக்கும் மலேசிய இந்தியர்களுக்குப் பிரதமர் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்து இந்த ஏமாற்றங்களைத் துடைத்தொழிப்பாரா?

இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே. வரக்கூடிய 2025ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டில் இந்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா?

மலேசிய இந்தியர்களுக்கான ஒரு போராளி என்று தம்மைக் காட்டிக்கொள்ளும் அன்வார் அதனை உண்மையாக்குவாரா?

இனம் அல்லது சமயத்தைப் பார்க்காமல் அனைத்து மலேசியர்களுக்கும் சமச்சீராக நடந்துகொள்ளும் ஒரு தலைவராக அன்வார் நிரூபிப்பாரா?

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்படும் உதவிகளைத் தம்முடைய சொந்த அரசியல் லாபத்திற்காகச் செய்யவில்லை என்பதை அன்வார் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்திய சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய பணிகளில் தாம் தோல்வி கண்டால் இந்தியர்கள் தம்மைக் குத்தலாம் என்று அம்பேத்கர் மாநாட்டில் அன்வார் சூளுரைத்திருக்கிறார்.

இந்நாட்டிற்காக கண்ணீர், வியர்வை, ரத்தம் சிந்தியிருக்கும் மலேசிய இந்தியர்கள் இயற்கையாகவே வன்முறையாளர்கள் என்பதை அவர் இதன் மூலம் சொல்லாமல் சொல்கிறாரா?

இந்த வார்த்தையை அன்வார் பயன்படுத்தியிருக்கவே கூடாது.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here