போக்கிடம் இல்லை கைவிடவும் மனமில்லை

பி.ஆர். ராஜன்

கிள்ளானில் புக்கிட் திங்கி–2இல் செயல்பட்டுவரும் உடற்பேறு குறைந்தோர், அரவணைப்பு இல்லம் தற்போது  தொடர்ந்து செயல்படுவதற்கு நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு மே மாதம்  தொடங்கப்பட்ட இம்மையம் மூன்று பேரை மட்டுமே கொண்டிருந்தது.  இப்போது 15 சிறார்களும்  இளைஞர்களும் உள்ளனர்.  இவர்களுக்கு சிறப்பு தேவைகள் இருக்கின்றன. இவர்களுள் பெரும்பாலோர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள்.

10 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட இவர்களுக்கு  தற்போது 11 முதல் 25 வயதாகிறது. இவர்களுள் உடற்பேறு குறைந்த இளைஞர்கள், சிறப்புத் தேவைப் பிள்ளைகள், டவுன் சின்ட்ரம் சிறார்கள் இருக்கின்றனர்.

இந்த இல்லத்தை நடத்துவதற்கு மாதமொன்றுக்கு 15 ஆயிரம் ரிங்கிட் தேவைப்படுகிறது. இதில் 1,700 ரிங்கிட் வாடகைக்கும்  800 ரிங்கிட் மின்சாரக் கட்டணத்திற்கும் 200 ரிங்கிட் தண்ணீர் கட்டணத்திற்கும் செலுத்த வேண்டியிருக்கிறது. இவர்களுக்கான மருத்துவ செலவுகளையும் ஈடுகட்ட வேண்டியிருக்கிறது.

2020 கொடூர கோவிட்–19 பரவலுக்குப் பிறகு இந்த மையம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கிறது என்று இந்த இல்லத்தை நடத்திவரும் எஸ். குணராசா தெரிவித்தார்.

இந்த இல்லத்திற்கு  தொடர்ந்து நன்கொடைகள் வழங்கி வந்த நல்லுள்ளங்கள் இப்போது நிதி நெருக்கடியால் அவர்களால் கைகொடுக்க இயலவில்லை. பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருக்கும் இந்த சிறார்களை கைவிடவும் முடியவில்லை. இவர்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை.

எனவே, நல்லுள்ளம் படைத்த பொதுமக்கள்  நிதி தந்து உதவ வேண்டும் என்று குணராசா கேட்டுக் கொண்டார். அவரை 019-7058797 என்ற எண்ணிலும்  03-33232666  என்ற எண்ணிலும் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.

பெற்றவர்களால் கைவிடப்பட்ட இந்தப் பரிதாபத்திற்குரிய கடவுள் பிள்ளைகளுக்கு ஒரு வாழ்க்கையை தந்திடுவதற்கு  சமுதாயம் கரம் சேர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here