‘வீட்டுக்காவலில் நஜிப்பை வைத்திருக்கலாம்’: அரச மன்னிப்பு பத்திரத்தின் பிற்சேர்க்கையிலுள்ளது உண்மை- ஜாஹிட்

கோலாலம்பூர்:

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம் என்று, அவருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புப் பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் கூறப்படுவது உண்மை என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்தப் பிற்சேர்க்கை தொடர்பாக மறுஆய்வு செய்யுமாறு கோரி நஜிப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் ஜாஹிட் தமது சத்தியல்பிரமாண வாக்குமூலத்தின் மூலம் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் முந்தைய மாமன்னரான மாட்சிமை தங்கிய பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்கினார்.

இதன் விளைவாக அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.

மேலும் அரச மன்னிப்பில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையை முன்னாள் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் ஜஃப்ருல் அப்துல் அஸிஸ் தம்மிடம் ஜனவரி 30ஆம் தேதியன்று காட்டியதாக அம்னோ தலைவரான டாக்டர் ஸாஹிட் கூறினார்.

“ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை நஜிப் காஜாங் சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவலில் அனுபவிக்கலாம் என்று அந்தப் பிற்சேர்க்கையில் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், குறித்த பிற்சேர்க்கை ஜனவரி 29ஆம் தேதியன்று இணைக்கப்பட்டது என்றும், அப்போதைய மாமன்னரின் கையொப்பமும் முத்திரையும் உள்ளதாகவும் அவர் கூறினார்..

“அந்தப் பிற்சேர்க்கை உண்மையானது என்று உறுதியாகக் கூறுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் நான் வாசித்தேன். எனவே, அந்தப் பிற்சேர்க்கை இருப்பது உண்மைதான்,” என்று டாக்டர் ஜாஹிட் கூறினார்.

அந்தப் பிற்சேர்க்கையின் அசல் தலைமைச் சட்ட அதிகாரியிடம் உள்ளது என்றார் அவர்.

அதேநேரம் டாக்டர் ஜாஹிட்டின் பிரமாண வாக்குமூலத்தை மலேசிய நீதித்துறை அதன் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

முன்னதாக, நஜிப்பின் மனு தாக்கல் தொடர்பான நீதிமன்ற விசாரணையை செய்தியாளர்கள் நேரடியாக பார்க்க நீதிமன்றம் தடை விதித்தது.

இருப்புனும் குறித்த சீராய்வு மனுவை நீதிபதி அமர்ஜீத் சிங் ஏற்றுக்கொண்டார் என்றும் அவர் தமது முடிவை ஜூன் 5ஆம் தேதி தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here