சிவசுதன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பரிதாபம்

 

கவின்மலர்

அரச மலேசிய விமானப்படையின் லுமூட் கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட  ஹெலிகாப்டர் விபத்தில்  விமானப்படை அதிகாரி லெஃப்டிணன்ட் சிவசுதன் த/பெ தஞ்சப்பன் (வயது 30)உயிரிழந்தது அவரின் குடும்பத்தாருக்கும் மனைவிக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன.

 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணமான  சிவசுதன் இவ்விபத்தில்  உயிரிழந்த 10 பேரில் ஒருவராவார்.

யுடிஎம் எனப்படும் மலேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் ( Universiti Pertahanan Malaysia) பட்டம் பெற்றவரான இவர் முதலில் சபாவில் பணி அமர்த்தப்பட்டு பின்னர் லுமூட் ஆகாயப்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் டாக்டர் ஹர்ஷினி த/பெ சந்திரசேகர்  என்ற பல் மருத்துவரை  திருமணம் செய்துகொண்டார். இவரின் தந்தை மு. தஞ்சப்பன் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர். தாயார் ஏ.பரமேஸ்வரி சித்தியவானில் உள்ள ஏ.சி.எஸ். இடைநிலைப் பள்ளி ஆசிரியர். இவரது தந்தை சமூக சேவைகளில் ஈடுபாடு உடையவராவார். ம.இ.கா. லுமூட் கிளையின்  செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

சிவசுதனின் அக்கா டாக்டராகவும் தங்கை ஆசிரியராகவும் பணியாற்றுவதாக சிவசுதனின் குடும்பத்தினரை அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here