பொல்லாததைச் செய்யாதீர்

க. கலை

போர்ட்டிக்சன் ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்புறமுள்ள கடற்கரையில் சாங்கியம் என்ற பெயரில் நமது மக்கள் செய்திடும் பொல்லாத காரியங்கள் பின்னாளில்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

பலமுறை எச்சரித்தும் ஆலோசனைகளைச் சொல்லியும்  இவர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.  அங்கு வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகங்களையும் இவர்களின் கண்களில் படுவதில்லை.

இந்த இடத்தில் இனியும் எவ்வித சாங்கியங்களும் செய்யக்கூடாது என்று போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் இழப்பு, சிரமங்கள் யாருக்கு என்பதை இவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சாங்கியங்களுக்கான பொருட்களை அங்கேயே விட்டுச் செல்வது, மாற்றுத் துணிமணிகளை அங்கேயே போட்டுச் செல்வது,  குப்பைகளையும் அங்கேயே விட்டுச் செல்வது போன்றவை நமது சமயச் சாங்கியங்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.

இதற்காக தனி குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும்  இவர்கள் பயன்படுத்துவது இல்லை.  ஒவ்வொரு முறையும் ஆலய நிர்வாகத்தினர் களமிறங்கி குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதேபோன்று போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகப் பணியாளர்களும் இந்தக் குப்பைகளை அள்ளிச் செல்கின்றனர்.

இது மட்டுமன்றி தெய்வச் சிலைகளையும் ஆங்காங்கே விட்டுச் செல்வதும் மிகப் பெரிய சங்கடமாக இருக்கிறது. இந்தச் சிலைகளை ஆலயங்களிடம் ஒப்படைக்கலாம். அல்லது அங்குள்ள அரசமரத்தடியில் விட்டுச் செல்லலாம். இப்படித் தான்தோன்றித்தனமாக செய்வது யாருக்குக் கேவலம்?

நேற்றுக்காலை அந்தப் பகுதிக்கு வருகைப் புரிந்த ஸ்ரீதஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கு. ராஜசேகரன் அப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்து மனம் நொந்துபோனார்.

இதுபோன்ற நிலைத் தொடர்ந்தால் இந்தியர்கள் குறிப்பாக இந்துகள் வரும் காலத்தில்  பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இந்தப் பிரச்சினை இனி மேலும் தொடர்ந்தால் உரியவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், போலீஸிலும் புகார் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக அமலாக்கப் பிரிவு இங்கு விடியற்காலையில் ரோந்துப் பணியை மேற்கொள்ளும் சூழலும் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

இதனிடையே, இன்று காலை ஆலயத் தலைவர் பெ. ஜெகநாதனும் ஆலயப் பணியாளர்களும் கடற்கரைப் பகுதியில் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர். ஆலயம் இங்கு இருப்பதனால் இவர்கள் இந்த கடற்கரையில் காரியங்கள் செய்கின்றனர் என்று குறிப்பிட்ட ஜெகநாதன் இந்நிலை தொடர்ந்தால் ஆலயத்திற்குத்தான் பிரச்சினை என்பதை நினைவுறுத்தினார்.

இந்தப் பகுதியில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்கக்கூடாது. அதற்கென்று ஒரு சிறப்பு இடம் சற்று தொலைவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அதனை செய்யாமல் ஆலயத்திற்கு எதிர்புறமுள்ள கடற்கரையில் அஸ்தியைக் கரைப்பது இன்னொரு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here