சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன், காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு பல்வேறு அரசியல் கொலைகள், குண்டு வெடிப்பு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் அடக்கி ஒடுக்கப்பட்ட போதிலும், பஞ்சாபில் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. இந்த சூழலில் கனடாவில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு, கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுகிறது. காலிஸ்தான் ஆதரவு முழுக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.