நேர்காணல் : இரா: முத்தரசன்
பிரதமராகி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் – இந்திய சமுதாயத்தின் பல்வேறு அதிருப்திகளுக்கு மத்தியில் – பி கே ஆர் கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் தனக்கென இந்திய அரசியல் செயலாளர் ஒருவரை அண்மையில் நியமித்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்.
நாடு முழுக்க இந்திய சமுதாயத்தில் பல்வேறு குறைகூறல்கள் பரவி வரும் சூழலில் – இந்தியர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் – தனது அரசியல் செயலாளர் என்ற அந்த முக்கியப் பதவிக்கு அன்வார் தேர்ந்தெடுத்திருக்கும் பிகேஆர் கட்சியின் இளம் தலைவர் மணிவண்ணன் கோவின்.
நியோஷ் என்னும் வேலை இட பாதுகாப்புக் கழகத்தின் துணைத் தலைவராகவும் மணிவண்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2013- ஆம் ஆண்டு காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அடுத்து வந்த பொதுதேர்தல்களில் சட்டமன்றம்-நாடாளுமன்றம் எனப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அதன்மூலம் தேர்தல் களம் கண்ட அனுபவத்தால் – மக்கள் பிரச்சினைகளை – குறிப்பாக இந்தியர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர்.
தனக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பணிகள் என்ன? தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவியின் மூலம், தான் சாதிக்க நினைப்பது என்ன? இந்திய சமுதாயத்தின் அதிருப்திகளை எதிர்கொள்ள பிரதமரின் வியூகங்கள் என்ன? என பல அம்சங்களை மக்கள் ஓசைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொண்டார் மணிவண்ணன்.
ஏன் இந்தப் புதிய பதவி? இலக்குகள் என்ன?
மணிவண்ணனையும் சேர்த்து பல்வேறு பின்னணிகள் கொண்ட ஐந்து அரசியல் செயலாளர்களை தனக்கென நியமித்திருக்கிறார் பிரதமர். அந்த ஐவரில் மணிவண்ணன் மட்டுமே இந்தியர்.
பி கே ஆர் கட்சியின் தலைவரின் அரசியல் செயலாளர் என்ற பொறுப்புடன் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவிக்கு ஐந்து வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது கட்சியை வலுப்படுத்துவது; இரண்டாவது கட்சியின் நடவடிக்கைகளை, மக்கள் பணிகளைக் கண்காணித்து, அதற்கு ஏற்ப அறிவுரைகள் வழங்குவது; மூன்றாவது, கட்சியின் அனைத்து நிலைகளையும் ஒருங்கிணைப்பது; நான்காவது நாட்டின் நடப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப – எதிர்கால மாற்றங்களுக்கு ஏற்ப – கட்சியின் சட்ட விதிகளை எவ்வாறு திருத்தம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குவது. இறுதியாக ஐந்தாவதாக, நடப்பு அரசியல் சூழ்நிலைகள், பிரச்சினைகள் குறித்த நிலவரங்கள் மீது கலந்துரையாடல்கள் நடத்துவது – சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது – தீர்வுகளைப் பரிசீலிப்பது – என்பதாகும். நாங்கள் பிகேஆர் கட்சித் தலைவரின் அரசியல் செயலாளர்கள்தாம் என்றாலும் எங்களின் கட்சித் தலைவர் பிரதமர் என்பதால் மேற்கண்ட இலக்குகளை நாங்கள் கவனமுடன் கையாளுவோம் என விளக்கம் தந்தார் மணிவண்ணன்.
பிரதமருடன் நேரடியாக 3 கூட்டங்கள்
எங்களுக்கு இடையில் இதுவரையில் ஐந்து சந்திப்புக் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். அதில் மூன்று கூட்டங்களில் பிரதமர் நேரடியாகக் கலந்து கொண்டு கொண்டார் என்பதிலிருந்து எங்கள் அரசியல் செயலாளர் குழுவுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தியர் சார்பாக நான் ஒருவன் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதால் நாடெங்கிலும் இருந்து பல இந்திய நண்பர்கள், அரசியல்வாதிகள் என என்னை அழைத்து வருகிறார்கள். சபா, சரவாக் மாநிலங்களிலுள்ள இந்திய சமூக நண்பர்களிடமிருந்தும் அழைப்புகள் வந்திருக்கின்றன. இதன்மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதை உணர்கிறேன்.
அனைத்து தரப்பினரையும் சந்தித்து பிரச்சினைகளை அறியவும் தீர்வு காணவும் நான் முற்பட்டு வருகிறேன். உடனடியாக என்னைச் சந்திக்க முடியாதவர்கள் கொஞ்சம் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றார் மணிவண்ணன்.
இந்தியர் பிரச்சினைகளுக்கு பிரதமரின் அணுகுமுறை – தீர்வு என்ன?
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மலேசிய அரசாங்கம் எல்லாப் பிரச்சினைகளையும் இன ரீதியாகவே அணுகி வந்திருக்கிறது. பிரதமர் அன்வாரோ மலேசியர்கள் என்ற ரீதியில் அனைவருக்கும் பொதுவான முறையில் தீர்வுகளை அடையாளம் கண்டு செயல்படுத்த முனைந்துள்ளார். அதனால்தான் இந்திய சமூகத்திற்கு இந்த அணுகுமுறையைப் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் தர நாங்கள் முற்பட்டிருக்கிறோம் எனவும் மணிவண்ணன் தெரிவித்தார்.
உதாரணமாக, பள்ளிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் இத்தகைய அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. எந்த இனத்துக்கான – எந்த மொழிக்கானப் பள்ளி என்று பார்க்காமல் எல்லாப் பள்ளிகளையும் சரிசமமாக நடத்தி நிதி உதவிகள் வழங்க பிரதமர் முற்பட்டு வருகிறார். நாங்களும் பல இனக் கட்சி என்பதால் எந்தச் சமூகத்தையும் புறக்கணிக்காமல் செயல்பட விரும்புகிறோம். இத்தகைய அணுகுமுறை மூலம் இந்திய சமுதாயம் தங்களுக்குரிய வாய்ப்புகளைப் பெற – அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களின் பயன்களைப் பெற சற்று காலதாமதம் ஆகலாம். ஆனால் தூரநோக்கில் இந்திய சமுதாயம் முன்பிருந்ததைவிட கூடுதல் பலன்களைப் பெற முடியும். நானும் இதனை உறுதி செய்யும் வகையில் பாடுபட்டு வருகிறேன் எனவும் விவரித்தார் மணிவண்ணன்.
அனைவரும் இணைந்து பாடுபடுவோம்!
இந்த வேளையில் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன். சமூக ஊடகங்களில் மட்டும் உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யாமல் நேரடியாக எங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் கருத்துகளையும் பிரச்சினைகளையும் முன் வைத்தால், அதற்கான தீர்வுகளைக் காண கண்டிப்பாக நாங்கள் பாடுவோம்.
இந்தப் பிரச்சினைகளை நாங்கள் நேரடியாகப் பிரதமருடன் விவாதிக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நான் அரசியல் பேதம் இன்றி அனைத்து தரப்புகளுடனும் இரு வழி கலந்துரையாடல் நடத்தி – இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
எனவே, தனிமனித தாக்குதல்கள், விமர்சனங்கள் இல்லாமல் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ற அடிப்படையில் நாம் அவற்றை அணுகுவோம்.
சமூக ஊடகங்களில் உங்களின் பிரச்சினைகளை எழுப்புங்கள். கேள்வி கேளுங்கள்.
ஆனால் அரசாங்கத் தலைவர்களையோ அரசியல்வாதிகளையோ சாடாதீர்கள். அது தீர்வுகளைத் தேடித் தராது. அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் முன்னெடுக்கும் பிரச்சினைகளின் கூர்முனை மழுங்கிவிடும் என்பதையும் பிரச்சினைகளின் தாக்கம், அழுத்தம் குறைந்து விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். என்றும் சமூக ஊடகப் பயனர்களுக்கு ஆலோசனை வழங்கினார் மணிவண்ணன்.
கோலகுபுபாரு : நடப்பு அரசாங்கம் மட்டுமே
இந்திய சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்!
கோலகுபுபாரு இந்திய வாக்காளர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளையும் நினைவூட்டலையும் முன்வைக்க விரும்புகிறேன். எங்களின் ஆட்சி தொடர இன்னும் மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி! நாடு தழுவிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருந்தாலும் சரி!
அவற்றுக்கான தீர்வுகளைக் காண நடப்பு மாநில அல்லது மத்திய அரசாங்கத்தால் மட்டும்தான் முடியும். எதிர்க்கட்சிகளின் சாடல்களோ – எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி தூண்டிவிடும் அவர்களின் நடவடிக்கைகளோ – நமது பிரச்சினைளைத் தீர்த்து விடாது.
எனவே ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்து – அவரை வெற்றி பெறச் செய்து – அந்த அடிப்படையில் நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான் புத்திசாலித்தனமான – சரியான – அணுகுமுறையாக இருக்கும்.
மாறாக அரசாங்கத்திற்கு எதிராக பாடம் கற்பிக்கிறோம் என எதிராக வாக்களித்து – ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை தோற்கடித்து விட்டு – அதன் பின்னர் பிரச்சினைகளை எடுத்துவந்து அதற்குத் தீர்வு காண முற்படுவது சரியான அணுகுமுறை அல்ல. எனவும் தெரிவித்த மணிவண்ணன், அந்தச் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் பிரச்சினைகளுக்கும் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நாங்கள் பின்னணியில் பாடுபட்டு வருகிறோம் என்ற உறுதியையும் வழங்கினார்.
நாம் அணிந்திருக்கும் அழகான சட்டை என்பது பல நூல் இழைகளின் ஒருங்கிணைப்பால் உருவானது. அதேபோல நாம் அனைவரும் இணைந்து ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு பாடுபடும்போதுதான் நமக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு நமக்கென அழகான, சிறந்த எதிர்காலம் உருவாகும். நாம் அனைவரும் இணைந்து இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு பிரதமருடன் இணைந்து முடிந்த வரையில் தீர்வு காண முற்படுவோம் என்ற அறைகூவலுடன் நேர்காணலை நிறைவு செய்தார் மணிவண்ணன்.
தனக்கு தகவல் அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில்
வாட்ஸ் எப் வாயிலாக, ஆவணங்களையோ, குரல் பதிவுகளையோ சமர்ப்பிக்கலாம்
என்றும், தன்னை அழைத்துப் பேசுவதற்கு இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டாம்
என்றும் அவசியம் இருந்தால் தானே அழைப்பதாகவும் மணிவண்ணன் தெரிவித்துக்
கொண்டார்.
கைப்பேசி எண்: 016-6565339