ஹரியாணாவில் புனித யாத்திரை சென்ற பக்தர்களின் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியாணா மாநிலம் சண்டிகர் பகுதியில் இருந்து 64 பேர் பேருந்து ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவிற்கு புனித யாத்திரை சென்று இருந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு அனைவரும் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.
ஹரியாணா மாநிலம் நூ அருகே வந்தபோது, திடீரென பேருந்தின் பின்பகுதியில் தீ பிடித்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பேருந்தில் இருந்தவர்கள், முண்டி எடுத்துக் கொண்டு இறங்க முயற்சி செய்துள்ளனர்.
பேருந்து தீப்பிடித்து எரிவதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே, பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த பயங்கர தீ விபத்தில் பேருந்தில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நூ அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.