மக்களுக்கு நல்வாழ்வு பிரதமரின் இலக்கு

பி.ஆர். ராஜன்

ஒற்றுமை அரசாங்கத்தின்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதுவரை மேற்கொண்டு வந்துள்ள – இனிவரும் காலங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள – மக்கள் நலன் பயக்கும் திட்டங்களின் இலக்குகளை, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளின் அடிநிலை உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், அந்த திட்டங்களின் அம்சங்களை உறுப்பு கட்சிகளின் தலைவர்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

அதேவேளையில் பல்வேறு இலாகாக்கள் மூலம், பொது மக்களுக்கு அரசாங்கம் வழங்கவிருக்கும் திட்டங்களின் பலன்கள் அவர்களுக்கு முறையாக சென்று சேரும் வண்ணம் அவர்களின் தேவைகளை ஒருமுகப்படுத்துவதோடு அவர்களுக்கு உதவி செய்யவும் ஒற்றுமை அரசாங்கக் கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கட்சி அரசியல் செயலாளர் மணிவண்ணன் கோவின் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கம்  இதுவரை மேற்கொண்டு வந்துள்ள – இனி அமல்படுத்த உத்தேசித்துள்ள – மக்கள் நலத்திட்டங்களின் அணுகுமுறை அனைத்தும் மக்களிடையே செல்வாக்கை பெறுவதற்காக மட்டுமல்லாமல் – மாறாக, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அவர்கள் மேலும் செல்வச் செழிப்புடனும் பாதுகாப்புடனும் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்குமான நடவடிக்கைகளாகும்.

எங்களின் அடிநிலை உறுப்பினர்களிடமிருந்து கிடைத்து வரும் கருத்துகளின் மூலம் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பால் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரித்து வருவதாகவும் எனவே  தங்களுக்கு உதவும் நோக்கில் கடுமையான பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தைப் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு மூன்று நாட்கள் வருகை மேற்கொண்டு இங்குள்ள பொதுமக்களிடமும் ஒற்றுமை அரசாங்கக் கட்சிகளின் அடிநிலை உறுப்பினர்களிடமும் அவர்களின் கருத்துக்களைப் பெறும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த சமயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21) இரவு பிரதமர் தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை நானும் நெகிரி செம்பிலான் மாநில அளவிலான மற்ற தலைவர்களும் பொதுமக்களுடன் ஒரு சேர அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹருண் கலந்து கொண்டு சிறப்பித்தார். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதே சமயத்தில் மக்களுக்கான நல உதவி திட்டங்களை துணிச்சலுடன் செயல்படுத்தும் இருமுனை இலக்குகளுடன் கூடிய பிரதமரின் அறிவிப்புகளை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அந்த சந்திப்புக் கூட்டத்தை பயன்படுத்தி நான் அனைவரிடமும் கேட்டுக் கொண்டேன்.

மடானி அரசாங்கத்தின் துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளை பிரதமர் செயல்படுத்தி வருவதையும் நான் சுட்டிக் காட்டினேன். குறிப்பாக ஊழலை ஒழிப்பது, அரசாங்க செலவினங்களில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வது, முறையாக மக்களுக்கு சென்றடையக் கூடிய உதவி நிதிகளை வழங்குவது ஆகிய திட்டங்களின் மூலம் நாட்டின் வளத்தை சரியான முறையில் நிர்வகிப்பதோடு சாதகமான பொருளாதார இலக்குகளை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும், மக்களுக்கான உதவி நலத்திட்டங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று பிகேஆர் உச்சமன்ற உறுப்பினருமான மணிவண்ணன் குறிப்பிட்டார்.

பிரதமர் எடுத்து வரும் அரசாங்க நடவடிக்கைகள் மூலம்  நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்படும் எனவும் மக்களின் வாழ்க்கை செலவினங்களை குறைப்பதற்கு உதவும் எனவும் நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். எனவே, நாம் அனைவரும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.  வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து வரும் பிரச்சினை என்பது நம் நாட்டை மட்டுமின்றி உலக அளவில் பல நாடுகளை பாதித்துள்ள ஒரு விவகாரமாகும்.

மக்களுக்கான உதவி நலத் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு கொண்ட அரசாங்க இலாகாக்கள் தங்களின் நடவடிக்கைகளை மேலும் விரைவு படுத்த வேண்டும் – விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதே வேளையில் அமலாக்க அதிகாரம் கொண்ட இலாகாக்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சில தரப்புகள் கூடுதல் லாபம் சம்பாதிப்பதையோ, பொய் தகவல்களை பரப்பி நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைப்பதையோ தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான “கண்களாகவும் காதுகளாகவும்” தங்களைக் கருதி தங்களின் கடமைகளை பொறுப்புணர்வுடன் செய்து வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எந்த ஒரு தவறான நடவடிக்கையோ, முறை தவறிய செயல்களையோ அவர்கள் காண நேர்ந்தால், அதிகார விதிமீறல்களை எதிர் கொண்டால், வீண் அரசாங்க விரயங்களையும் ஏமாற்றுத் திட்டங்களையும் கண்டுபிடித்தால், அதன் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் இழப்புகள் ஏற்படும் என்பது தெரிய வந்தால் அவற்றை உடனடியாக நாட்டின் அமலாக்க அமைப்புகளுக்கு  தயங்காமல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன் என்று மணிவண்ணன் சொன்னார்.

தகவல் தொடர்புக்கு:

ஜெகதீஷ் சுப்பிரமணியம்: 011-61878599

கானப் பிரகாஷ்: 017-3054867

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here